பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/521

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி குணம் நாடிக் குற்றமும் நாடி

1143

இளித்துக் கொண்டு நிற்கிறான் என்பதைவிடப் பெண்கள்தான் அவனிடம் பல்லை இளித்துக் கொண்டு நிற்கிறார்கள் போலிருந்தது. மணியை இன்ஸ்டிடியூட்டிலிருந்து சஸ்பெண்ட் செய்யலாமா என்று யோசித்தார் டாக்டர் சுவாமிநாதன்.

இதற்குள் நந்தினியே பரபரப்பாக அவரைத் தேடி வந்தாள். பதற்றத்தோடு அவரிடம் மன்றாடினாள் :

“சார்! அப்பாவே என்னிடம் சொன்னார். 'யாரோ கவிதை ரோஜாப்பூ - அது இதுன்னு உன் பெயருக்கு எழுதி இங்கே வீட்டுக்கு ஒரு லெட்டர் அனுப்பியிருந்தான் அம்மா, அந்த லெட்டரை அப்படியே டாக்டர் சுவாமிநாதனுக்கு மேல் நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறேன்’ என்றார். நீங்க தயவுசெய்து மணி சார் மேலே - எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அவர் ரொம்ப நல்ல மாதிரி சார்! பூப்போல மனசு அவருக்கு. என்னாலே அவருக்குக் கெடுதல் வரக்கூடாது சார்.”

“சரி! நீ சொல்கிறபடியே மணி மேலே நான் எந்த நடவடிக்கையும் எடுக்கல்லேன்னே வச்சுக்கலாம். உங்க அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்றது”

"இனிமே இதுமாதிரி எதுவும் நடக்காதுன்னு பொதுவா ஒரு வரி எழுதுங்கோ போதும். அப்பாவை எனக்கு நன்னாத் தெரியும்.மேலே இதுபற்றி உங்களிடம் எதுவும் கேட்கமாட்டார்”

“என்னமோ அம்மா, ரிஸர்ச் ஸ்டுடண்ட்ஸ்னு சேர்ந்துட்டு நீங்கள்ளாம் கவிதை, காதல் கத்திரிக்காய்ன்னு இப்படி அலையறது கொஞ்சங்கூட நல்லா இல்லே.”

“இந்த ஒரு தடவை பெரிய மனசுபண்ணி மன்னிச்சுடுங்கோ சார்.இனிமே இப்பிடி எதுவும் நடக்காது.”

“சரி. பார்க்கலாம். போ!” - பிடி கொடுக்காமல் பதில் சொல்லி அவளை அனுப்பினார் சுவாமிநாதன். அன்றிரவு மணி வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து மனைவியிடம் இந்த விஷயத்தைப் பிரஸ்தாபித்தார் அவர்.

“மணிக்குக் கெடுதல் எதுவும் பண்ணாதீங்கோ. அவனுக்குச்சூது வாது எதுவுமே தெரியாது. பூப்போல வெள்ளை மனசு, கள்ளங்கபடு தெரியாதவன். தப்பா எதுவும் பண்ணியிருக்கமாட்டான்” என்று உடனே மணிக்குப் பரிந்து கொண்டு வந்தாள் அவர் மனைவி.

“ஒரு கலியான வயசுப் பெண்ணைப் பார்த்து உன் கைக்கும், ரோஜாப்பூவுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பறேன்னு ஒரு கலியான வயசுப் பையன் சொன்னால், அது தப்பில்லையோ?”

"அதிலே என்ன தப்பிருக்கு? தினம் பூஜையறையிலே அம்பாளுக்குப் பூஜை பண்றப்போ'சரோஜதளநேத்ரின்னு நீங்ககூடஸ்தோத்திரம் பண்றேள், அது தப்பா'

"நந்தினியோட அப்பா கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்காரே'

'தப்பா ஒண்னும் நடந்துடலேன்னு சமாதானமா அவருக்குப்பதில் எழூதுங்கோ குழந்தை ஒரு பாவமுமறியாதவன். அவனைக் காமிச்சுக் குடுக்காதீங்கோ.”