பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1144

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“’சரோஜதளநேத்ரி’ன்னு நான் ஸ்லோகம் சொல்றதும், இதுவும் ஒண்ணாயிடாது. அதுலே ஒரு ‘பொயடிக் ஜஸ்டிஸ்’ - கவிதா நயம் இருக்கு”

“அதே பொயடிக் ஜஸ்டிஸ் மணியோட கவிதையிலும் இருக்கத்தான் இருக்கும் போங்கோ…”

அவளிடம் என்ன வாதிட்டும் பயனில்லை என்று தோன்றியது அவருக்கு. இரவு முழுவதும் யோசித்தார். மணிசெய்தது சரியா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இதைச் சாக்காக வைத்து அவனைப் போல் ஓர் இளங்குருத்தை வாடச் செய்து விட அவருக்கே தயக்கமாக இருந்தது. குணம் நாடிக் குற்றமும் நாடி ஒப்பிட்டு ஆராய்வது என்பது அந்த இன்ஸ்டிடியூட்டிற்கு மட்டுமில்லாமல், அதை நடத்துபவர்கள், அதில் கற்பவர்கள் எல்லோருக்குமே பொருந்தும் போல் தோன்றியது. தனது சொந்த விருப்பு,வெறுப்புகள், பொறாமைகள், அசூயைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அந்த விஷயத்தைப் பற்றி மிகவும் நடுநிலையோடு சிந்தித்து ஒரு முடிவுக்கு வர முயன்றார் டாக்டர் சுவாமிநாதன். மணியின் கவிதை உணர்ச்சியைச் சராசரிக் கல்லூரி மாணவனின் ஈவ் டீஸிங்காக எடுத்துக் கொள்ள முடியாதென்றே அவருக்கும் தோன்றியது.அவனது கவிதையால் பாதிக்கப்பட வேண்டிய நந்தினியோ, அவனுக்காக உருகி ஏங்குகிறாள். ‘பொயடிக் ஜஸ்டிஸ்’ பற்றித் தன் மனைவியே தன்னைக் கேட்ட கேள்வி அவருக்கு நினைவு வந்தது. கள்ளங்கபடமில்லாத பக்தனும், காதலனும் ஏதோ ஓர் இடத்தில், ஒரே மாதிரியான பொதுத்தன்மையால் இணைவதாக அவர் நம்பித்தானாகவேண்டியிருந்தது.

சந்திரஹாசன் ஐ.ஏ.எஸ்.ஸிற்கு இனி இது மாதிரி எதுவும் நேராமல் பார்த்துக் கொள்வதாகப் பொதுவில் ஒரு கடிதம் எழுதி விட்டு மணியை நேரில் கூப்பிட்டுக் கண்டித்தார் அவர். அவன் அவரை எதிர்த்துப் பேசவில்லை. தான் செய்ததே சரி என்று முரண்டு பிடிக்கவும் இல்லை. தன் கவிதையை அவர் படித்து விட்டதை அறிந்து, நாணினாற் போல் கூசி நின்றான். அவனது இங்கிதமான அடக்கம் அவரைச் சமாதானப்படுத்தியது.

“படிப்பைக் கவனி, பேரைக் கெடுத்துக் கொள்ளாதே... போ...” என்று சொல்லி அவர் அவனை அனுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம், நந்தினி அவரைத் தேடி வந்து நன்றி சொல்லி விட்டுப் போனாள். அடுத்த கால் மணி நேரத்தில் மணியையும், அவளையும் ஜோடியாக இன்ஸ்டிடியூட் பூங்காவில் பார்த்தார் அவர்.

முதலில் ஏற்பட்டகோபத்தில் அந்த அதிகப்பிரசங்கிக்கு இதன் மூலம் ஒரு பாடம் கற்பித்துவிடத்தான் துடித்தார் அவர். மணியை மன்னிக்க முதலில் அவர் மனம் தயாராயில்லை.

ஆனால், ஆழமாகச் சிந்தித்த போது அவனுக்குக் கற்பிப்பதை விடப் பல விஷயங்களில் அவனிடமிருந்து தான் கற்க வேண்டியிருக்கும் போல் தோன்றியது அவருக்கு. சின்னஞ்சிறுசுகளின் விஷயத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்டோம் என்ற முழுத் திருப்தியோடு, தம் மனைவியிடம் அந்த நல்ல முடிவைத் தெரிவித்து அவளை மகிழ்விக்க வீட்டை நோக்கி விரைந்தார் டாக்டர் சுவாமிநாதன்.

(கல்கி, தீபாவளி மலர் 1984)