பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1148 🞸

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

 நீங்கள் நகரின் மையப்பகுதிக்கு அங்கிருந்து வந்தாக வேண்டும். அதற்காக வேறு போக்குவரத்துச் செலவு ஆகும். உங்கள் பட்ஜெட் முழுவதும் போக வரவே செலவழிந்து விடும்.”

“வேறு வழியில்லை. எப்படியும் நான் அங்கே போய்த் தங்கித்தானாக வேண்டும். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்காரர்கள் எனக்காக அதை ரிசர்வ் செய்து விட்டார்கள்!”

"சிக்கனமாக நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்ல முடியும். ஏற்பதும் ஏற்காததும் உங்கள் பாடு” “என்ன யோசனை அது?” "இந்த யோசனையின் மூலம் செலவும் மிச்சப்படும். அநாவசியமாக அகாலத்தில் நீங்கள் நெடுந்தூரம் அலைந்து திரிவதையும் தவிர்க்கலாம். நாம் எந்த இடத்தில் இந்த ரயிலிலிருந்து இறங்குகிறோமோ, அந்த இடத்திற்கு லாண்ட் ஸ்ட்ராபே என்று பெயர். அதற்கு அருகேதான் வியன்னா ஹில்டன் இருக்கிறது. ஆனால், உங்கள் பட்ஜெட்டிற்கு ஹில்டன் ஒத்துவராது. அதற்குப் பக்கத்திலேயே என் சிநேகிதி ஒரு ஒட்டலில் மானேஜராயிருக்கிறாள். நான்கூட அங்கேதான் தங்கப்போகிறேன். விரும்பினால் நீங்களும் அங்கே தங்கலாம்!” "ஏற்கனவே நாய்பவ் ஒட்டலில் செய்த ரிசர்வேஷன் என்ன ஆவது? “பிரச்னை இல்லை. அதை டெலிபோன் மூலம் கான்ஸல் செய்துவிடலாம்.”

- சொல்லியபடி தன் அழகிய கண்களைச் சிமிட்டிக் குறுநகை புரிந்தாள் அங்கெலிகா, பேருக்கேற்றபடி தேவதையாகத்தான் தோன்றினாள் அவள்.

இந்தச் சமயத்தில் நான் அவளுக்கு மறுமொழி கூறுவதற்கு முன் நண்பன் பாஸ்டின் ராய்ஸின் எச்சரிக்கை நினைவு வந்தது. - “ஹாம்பர்க்கிலோ, பெர்லினிலோ அல்லது பாரிஸிலோ ஒரு விஷயத்தில் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எச்சரிக்கை எல்லாருக்குமே பொருந்தும் என்றாலும், குறிப்பாக உங்களைப் போன்ற ஆசியர்களும்-அராபியர்களும் சுலபமாக ஏமாற்றப்பட்டு விடுவீர்கள்! முன்பின் தெரியாத அழகிய இளம்பெண் யாராவது தன்னோடு வந்து தங்குமாறு அழைத்தாலோ, ஹாவ் எ கிளாஸ் ஆஃப் பீர் வித் மீ” என்று பீர் அருந்தக் கூப்பிட்டாலோ நம்பிப் போய்விடக் கூடாது. பீரிலோ, பானத்திலோ உங்களுக்குத் தெரியாமல் பிரக்ஞையோ, நினைவோ தவறச் செய்யும் மாத்திரைகளைக் கலக்கிக் கொடுத்து விடுகிறார்கள். அப்புறம் பணத்தையோ, உடமைகளையோ பறித்துக் கொண்டு போய்விடுகிறார்கள். இப்போதெல்லாம் சகஜமாக இப்படி நடக்கிறது. ஜாக்கிரதையாயிருங்கள். முன்பின் தெரியாதவர்களின் அழைப்பை அன்பு காரணமாக அழைப்பதாக ஏற்றுவிடாதீர்கள், ஆபத்து” என்பது பாஸ்டின் ராய்ஸ் எனக்கு அளித்திருந்த எச்சரிக்கை.ராய்ஸ் மட்டுமின்றி வேறு பலரும் இப்படி எல்லாம் மோசடிகள் சகஜமாக நடக்கின்றன என்று சொல்லிஎச்சரித்திருந்தார்கள்.