பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/528

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1150 🞸

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


அந்த அர்த்த ராத்திரியில் அவள் வற்புறுத்தி என்னைத் தன் முடிவுக்கு இசைய வைக்க முயல்கிறாளோ என்று பட்டது. வியன்னாவில் பயன்படுத்துவதற்கு என்று மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் 600 ஆஸ்டிரியன் வில்லிங்ஸ் தவிர, என்னிடம் மற்ற வகையில் இருக்கும் ஆயிரத்து எழுநூறு டாலரையும், இந்த அழகியிடம் பறிகொடுக்க வேண்டும் என்றுதான் நம் தலையில் எழுதியிருக்கிறது போலும் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது!

"கவலைப்படாதீர்கள் என்னை நம்புங்கள்.உங்களுக்கு ஒரு கஷ்டமும் வராது.என் சினேகிதியின் ஒட்டலுக்குப் போனவுடன் டெலிபோன் செய்து அந்தப் பழைய ஒட்டல் ரிஸர்வேஷனைக் கான்சல் செய்துவிடலாம்.” என்று, என் தோளை சகஜமாகத் தொட்டு மெல்லத் தட்டிக் கொடுத்தாள். பூப்போன்ற தன்னுடைய மிருதுவான விரல்களால் எனது வலது கையைப் பற்றி, "வாருங்கள்! போகலாம்” என்றாள். மறுபடியும் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டாள். என் நண்பன் பாஸ்டின் ராய்ஸ் கூறியிருந்தது எனக்கு நினைவு வந்தது “இருபது - இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் பொது இடங்களில் பிறர் முன் புகை பிடிக்கிற ஒரு ஜெர்மானியப் பெண்ணைக் கெளரவமானவளாகச் சமூகமே ஒப்புக் கொள்ளாது. இப்போதெல்லாம் சோஷியலாக இருப்பது, விமன்ஸ் லிபரேஷனைக் காட்டிக் கொள்கிறது ஆகியவற்றின் அடையாளமாகப் பெண்கள் புகை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்:” - ‘எப்படியோ இவளிடம் சிக்கிக் கொண்டோம்! வேறு வழியில்லை என்று அவளோடு சென்றேன் நான் நகரின் தெருக்கள் சந்தடியற்றிருந்தன. கட்டிடங்களும், மரம் செடி கொடிகளும், மின்விளக்குக் கம்பங்களும் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவை போல் தோன்றின. அகன்ற வீதியில் நானும் அவளும் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்தோம். தெருக்களின் ஆளரவமற்ற நிலை எனக்குப் பயமூட்டினாலும், அங்கெலிகா கலகலவென்று சிரித்துப் பேசி நடந்து வந்து கொண்டிருந்தாள். சாலையில் டிராம்வே தண்டவாளங்கள் விளக்கொளியில் தரையில் நீளும் மின்னல் கோடுகளாய் ஜ்வலித்துக் கொண்டிருந்தன.

"தாகமாயிருக்குமே.பீர்குடிக்கிறீர்களா?” என்று என்னைக் கேட்டுக் கொண்டே, தன் தோள்பையிலிருந்து மெல்லிய அலுமினிய டப்பாக்களில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு பீர் கேன்களை எடுத்தாள். நான் பதில் சொல்வதற்குள், இரண்டு பீர் டப்பாக்களின் ஊற்று வாயையும் மூடியிருந்த மெல்லிய அலுமினியம் தகடுகளை உரித்தெடுத்துத் திறந்தும் விட்டாள்.

எனக்கு உதறலெடுத்தது. சந்தேகம் பிடித்தது. பிரக்ஞையிழக்கச் செய்யும் மாத்திரைகளை பீர் கேனிலே போட்டிருப்பாளோ.

"இல்லை எனக்கு வேண்டாம். நீங்கள் குடியுங்கள் அங்கெலிகா.”

"சிகரெட் குடிப்பதிலை. பீர் வேண்டாமென்கிறீர்கள். உங்களிடம் என்ன கோளாறு.”