பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி சந்தேகங்களின் முடிவில்.

  • 1155

 இருநூற்றெண்பது ஷில்லிங் கொடுத்து, உங்களுக்காக ஒரு ஸீட் ரிஸர்வ் செய்து கொடுத்துவிட்டுப் போயிருக்கிறாள் அங்கெலிகா. நீங்கள் எட்டே முக்காலுக்கு இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும்” என்று என்னைத் துரிதப்படுத்தினாள். நான் கிளம்புமுன், “இந்தாருங்கள் அங்கெலிகாவின் கடிதம்' என்று ஒரு கனத்த உறையையும் என்னிடம் நீட்டினாள் கிஸ்லா. உடல்நலமில்லாத தந்தையைக் காணப் புறப்படுகிற அவசரத்தில், இத்தனை நீண்ட கடிதத்தை நமக்கு இவளால் எப்படி எழுத முடிந்தது என்ற வியப்புடன், அந்த உறையை வாங்கிப் பிரித்தேன் நான்.

“அருமை நண்பரே! முதலில் திடீரென்று சொல்லிக் கொள்ளாமல் புறப்பட நேர்ந்ததற்காக என்னை மன்னிக்கவும். காரணத்தை இதற்குள் கிஸ்லாவே உங்களிடம் கூறியிருப்பாள். பயமும்-கூச்சமும் நிறைந்த உங்களைத் தனியே தவிக்கவிடாமல் நானே உடன் வந்து, வியன்னாவில் எல்லாவற்றையும் சுற்றிக்காட்டி உங்களை வியப்பிலாழ்த்த நினைத்திருந்தேன். அது இயலாமல் போய்விட்டது. அதற்காக, எபிடிரமாடுர் கோச்சில் ஒட்டல் பித்தோவனிலிருந்தே டெலிபோன் மூலம் இரண்டு nட் ரிஸர்வ் செய்திருந்தேன். நான் என் nட்டை கான்சல் செய்துவிட்டு, உங்கள் nட்டை மட்டும் உங்களிடம் தரச்சொல்லி கிஸ்லாவிடம் கூறியிருக்கிறேன். தங்குவதற்காக நீங்கள் ஒட்டல் பித்தோவனுக்கு எதுவும் தரவேண்டியதில்லை. நான் பார்த்துக்கொள்வேன். அந்நியச் செலவாணியின்றிக் கஷ்டப்படும் உங்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன். மறுக்காது ஏற்றுக் கொள்ளுங்கள். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள இரண்டாயிரம் வில்லிங்ஸை என் அன்பளிப்பாக ஏற்கவும். அப்படி ஏற்க விருப்பமில்லை என்றால், கடனாக ஏற்கவும். கடனை எனக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் நீங்கள் இந்தியா திரும்பிய பின் உங்களால் முடியும்போது, இத்தொகைக்கு இணையான இந்திய ரூபாய்களை, ரோமன் கத்தோலிக்கர்கள் சார்புள்ள ஏதாவதொரு சாரிட்பிள் இன்ஸ்டிடியூஷனுக்கு நன்கொடையாக வழங்கினால் போதுமானது! நான் இந்தியா வர நேர்ந்தாலோ, மறுபடி நீங்கள் வியன்னா வர நேர்ந்தாலோ சந்திக்கலாம். உங்கள் முகவரி ஒட்டல் லெட்ஜருக்காக நீங்கள் தந்த விவரங்களிலிருந்து குறித்துக் கொண்டேன். என் முகவரி இக்கடிதத்தில் குறித்திருக்கிறேன். நீங்கள் வியன்னாவிலிருந்து புறப்படுகிறவரை கிஸ்லா உங்களுக்கு ஒரு குறைவுமின்றி உங்களைக் கவனித்துக் கொள்வாள். இந்த இடத்தில் என் இதழ்களால் ஒரு முத்தத்தைப் பதித்த பின் கையொப்பமிடுகிறேன்.

இப்படிக்குஉங்கள் அன்புள்ள,


அங்கெலிகா”


படித்து முடித்தவுடன் திகைப்பில் மலைத்தே போனேன். உடன் பிறந்தே கொல்லும் சந்தேகம் என்னும் நோயை ஒவ்வோர் இந்தியனிடமும் ஏன் வைத்தாய் என்று என்னை நோந்துகொள்ளத்தோன்றியது.பயத்திலிருந்தும் சந்தேகத்திலிருந்தும் விடுபடாத ஒர் அப்பாவி, காதலுக்கோ - நட்புக்கோ கூடத் தகுதியற்றவனாகத்தான் இருக்க வேண்டும் நான் அங்கெலிகாவிடம் அப்படித்தான் இருந்திருக்கிறேன். (இதயம் பேசுகிறது. தீபாவளி மலர், 1984) -