பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி

தேய்மானம்

  • 1159

பண்றேன். அவசரமாய்ப் போகணும். அப்புறம் பார்க்கலாம்” என்று மின்னலாய் மறைந்துவிட்டார் முத்துரங்கம். நல்ல வேளை, ஆட்டோவுக்குப்பத்து ரூபாய் கொடு, என்று கேட்காமல் அந்த மட்டில் விட்டாரே என்ற மகிழ்ச்சியில் நான் படியிறங்க இருந்தபோது, "சார், ஒரு நிமிஷம்" என்று குரல் கேட்டுத் திரும்பினேன். ஹோட்டல் பணப்பெட்டியில் அமர்ந்திருந்தவர்தாம் என்னைக் கூப்பிட்டார்.

திரும்பிப் போனேன்.

“உங்க செல்வாக்கிலே யாரிடமாவது சிபாரிசு பண்ணி இந்த மனுஷனுக்கு ஒரு வேலை வாங்கி வைக்கப்படாதா? இப்படிப் பைத்தியமா அலைகிறானே?”

“யாரைச் சொல்றீங்க?"

“இப்போ உங்க செலவிலே டிபன் சாப்பிட்டுவிட்டுப் போறானே, முத்துரங்கம், அவனைத்தான்.”

“ஏன்? அதான் நிறைய சினிமாவிலே நடிச்சுண்டிருக்காரே?”

‘மண்ணாங்கட்டி! அதை எல்லாம் நீங்க நம்பறீங்களா? சினிமாவும் இல்லை; தெருப்புழுதியுமில்லை; நானும் முத்துரங்கமும் ஒரே நாடகக் கம்பெனியிலேதான் இருந்தோம். கம்பெனி கலைஞ்சு போனதும் இனிமே யோக்கியமா வேற ஏதாவது தொழில் செஞ்சுதான் வாழனும்னு நான் கடனை உடனை வாங்கி இந்த ஒட்டலை வச்சேன். அவன் சினிமாவிலே சான்ஸ் தேடி அலைஞ்சான். இன்னிக்கி வரை எதுவும் கிடைக்கல்லே. ஏமாற்றத்திலும் விரக்தியிலும் மனநோயாளியா' மாறி, இன்னிக்கு அங்கே, நாளைக்கி இங்கே படபிடிப்பு, நேத்திக்கி பெங்களுர் போயிருந்தேன்னு பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் பொய் சொல்லிக்கிட்டு முடிவிலே, ரெண்டு ரூபா கைமாத்துக் குடுங்க'ன்னு முடிக்கிறது வழக்கம். இப்பல்லாம் பலபேர் இவன் தலையைப் பார்த்தாலே ஒட ஆரம்பிச்சுடறாங்க”

“ஐயையோ, அப்படீன்னா இவரோட குடும்பம்”

"குடும்பமா? இவனுக்கு ஏது குடும்பம்? தனிக்கட்டை சார்! அந்த நாளிலே நாடகக்காரனை நம்பி எவன் பெண் கொடுத்தான்” -

“நீங்களே இங்கே இந்த ஒட்டல்லே ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்து உட்கார்த்தி வைக்கப்படாதோ?”

“அதெல்லாம் ஏற்கனவே செய்து பார்த்தாச்சு. இங்கேயே உட்கார்த்திப் பார்த்தேன். வர்ற வாடிக்கையாளரை எல்லாம் நிறுத்தி வச்சு,'உங்களுக்குத் தெரியுமோ, சினிமாவிலே கேரெக்டர்ரோல் எல்லாம் பண்ணியிருக்கேன். இதோ இப்பக்கூட தரணி ஸ்டுடியோவில் படப்பிடிப்புஇருக்கு உடனே போயாகணும்னு சொல்லுவான் தொந்தரவு தாங்காமப் போச்சு முத்துரங்கம் நல்ல கலைஞன்தான். ஆனா விரக்தியும் ஏமாற்றமும் அவனை மனநோயாளியாவே ஆக்கிடிச்சு"