பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1160 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


"அவரைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சும் என்னைக் கூப்பிட்டு அவருக்கு வேலை கொடுக்கச் சொல்றீங்களே?”

“ஒரு நல்ல வேலையாப் பார்த்துக் கொடுத்து, உங்களை மாதிரி ஒருத்தர் படிப்படியா அறிவுரை கூறி மெல்ல மெல்ல மனசை மாத்தினிங்கன்னா, முத்துரங்கத்தோட பைத்தியத்தைத் தெளியப் பண்ணிடலாம்னு நெனைக்கிறேன்.

"அவர் எவ்வளவு காலமா இப்படி இருக்கார்?"

"பத்து வருஷத்துக்கு மேலேயே இருக்கலாம். சொந்தமாப் பாடத் தெரியும். நடிப்போடு சங்கீத ஞானமும் உண்டு.”

"பத்து வருஷ காலமாகத் தேய்ந்துபோன ஒரு கலையுணர்ச்சியை இனிமேல் சரிப்படுத்த முடியுமான்னு எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கு

"நீங்க படித்தவர் எழுத்தாளர். மனித மனங்களின் நுணுக்கங்களை அறிந்தவர். உங்க முயற்சி ஒருவேளை பயன் அளிக்கலாம். என்னாலே முடியாதது ஒருவேளை உங்களாலே முடியலாம். ஒரு நல்ல கலைஞன் வீணாப் போயிடக் கூடாதுங்கறதுதான் என்னோட கவலை”

"பார்க்கலாம், முயற்சி செய்யறேன்” என்று அவருக்கு உறுதி கூறிவிட்டுத் திரும்பினேன்.

என் அதிர்ஷ்டமோ, அல்லது துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. பனகல் பூங்கா அருகே அடுத்த வாரமே முத்துரங்கத்தை நான் சந்திக்க நேர்ந்தது. சாலையோரத்துக் கரும்பு ஜூஸ் வியாபாரியிடம் கரும்புச்சாறு கேட்டுவிட்டு, அவன் பிழிந்து தருவதற்காகக் காத்திருந்தபோது, "அண்ணா வணக்கம்! பூம்பொழில்லே அந்தச் சிறுகதை, ஜமாய்ச்சிருக்கீங்க” என்ற குரலுடன் முத்துரங்கம் உதயமானார்.

"நான் பூம்பொழில்லே கதை எதுவுமே எழுதலியே முத்துரங்கம்”

"நீங்க எதிலே எழுதினாலும் எழுதாவிட்டாலும் உங்க கதைன்னா எனக்கு உசிர் சார்” - இன்னொரு கிளாஸ் கரும்புச் சாறுக்குச் சொல்லிவிட்டு அருந்தி முடித்தபின், “முத்துரங்கம், உங்ககிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும். எங்கூட ஒரு பத்து நிமிஷம் பார்க்குக்கு வர முடியுமா? அவசரம் ஒண்ணும் இல்லியே உங்களுக்கு?” என்று ஆரம்பித்தேன்.

"அவசரந்தான். பார்க்கவி ஸ்டுடியோவில் நவபாரதி மூவிஸாரின் படத்திலே தகப்பனாரா நடிக்கிறேன். மகன் யார் தெரியுமா? சிவாஜிதான். அதாவது படத்திலே பரவாயில்லே, வாங்கோ, உங்களோட பேசிட்டு அப்புறமாப்போறேன்.”

பார்க்கில் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு மூலை பெஞ்சாகப் பார்த்து அமர்ந்தோம். நான் இதமான குரலில் ஆரம்பித்தேன்.