பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி

தேய்மானம்

  • 1161

"இதோ பாருங்கள், முத்துரங்கம்! உங்களுக்கு வயசாச்சு. நீங்க இன்னும் சின்னக் குழந்தை இல்லே. இப்படிச் சுத்தறது உங்களுக்கே நல்லா இருக்கா? உங்களுக்குத் தெரிஞ்ச சங்கீத ஞானத்தில நாலு குழந்தைகளுக்குச் சங்கீதம் சொல்லிக் கொடுத்தாக்கூட மாசம் நானூறு ஐந்நூறு சம்பாதிக்கலாம். சினிமா உங்களைப் பைத்தியமாக ஆக்கி விட்டதைப் பத்தி நீங்களே வருத்தப்படனும் நீங்க மனசு மாறி நல்லபடி வர்றதா இருந்தா, நானே நாலு டியூஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.”

“என் மேலே பொறாமையிலே, யாரோ என்னைப் பத்தி உங்ககிட்ட தப்பாச் சொல்லியிருக்காங்க. டியூஷனாவது ஒண்ணாவது? எனக்கு அதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு? இன்னிக்கி நவபாரதி மூவிஸ்ல படப்பிடிப்பு இருக்கு.நாளைக்கி சாந்தி சினிடோன்ல, நாளன்னிக்கி ஆர்.கே.வி. பிக்சர்ஸ்ல ஒரு நிமிஷம்கூட மிச்சமில்லே. இதோ பார்க்கவி ஸ்டுடியோவுக்குக் கிளம்பிண்டேயிருக்கேன்” என்று எழுந்திருந்தார் முத்துரங்கம்.

“இந்தாங்க, இதை வச்சுக்குங்க. ஆட்டோவுக்குத் தேவைப்படும்” என்று அவர் கேட்பதற்கு முன் நானாகவே பத்து ரூபாயை எடுத்து நீட்டிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். வழக்கம் போல் முதலில் ஆத்திரமும் பின்பு பரிதாபமும் ஏற்பட்டன.

என்றுமே இனிமேல் திருத்த முடியாத மனத்தளவுக்குத் தேய்ந்து போனபின் ஒரு கலைஞனின் மனத்தை மீண்டும் மறுமலர்ச்சியும் முழுமையும் பெறச் செய்ய முடியாதென்று என்னுள் ஒரு தீர்மானமான முடிவே ஏற்பட்டிருந்தது. கொஞ்சம் நஞ்சம் இல்லை. பல வருஷத் தேய்மானம்.

முத்துரங்கத்தை அவருடைய சொந்தக் கற்பனைகளிலும் சுகமான பொய்களிலுமே தொடர்ந்து வாழவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை அவருடைய நண்பரான வடபழநி ஒட்டல் உரிமையாளருக்கு டெலிபோன் செய்து கூறினேன்.

எந்தப்படத்திலுமே நடிக்காத முத்துரங்கம் என்னளவில் இன்னும்கூட ஒரு சூப்பர் ஸ்டாராகவே தோன்றினார். (கலைமகள், தீபாவளி மலர், 1984)