பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

161. ஒரு கவியின் உள் உலகங்கள்

பூங்குன்றத்துக்குத் தந்தி ஆபிஸ் கிடையாது. தந்தி, தபால் எல்லாம் பன்னிரண்டு மைலுக்கு அப்பால் இருந்த பெரிய நகரமான மேலநல்லூரிலிருந்துதான் பட்டுவாடா ஆக வேண்டும். இரயில்வே ஸ்டேஷனும் மேலநல்லூர்தான். அங்கிருந்து பூங்குன்றத்துக்குப் போக ஒற்றையடிப் பாதை. அடர்ந்த காட்டை வகிர்ந்து கொண்டு செல்கிறது. வண்டித் தடம் சுற்றுவழியாகப் போகிறது. அதன் மூலமாகப் போனால் மேலும் நாலு மைல் அதிகமாகும். ஒற்றையடிப் பாதையோ, வண்டித் தடமோ, எதுவானாலும் இருட்டிய பின் போக்குவரத்துக் கிடையாது. வன விலங்குகளைப் பற்றிய பயமும் உண்டு. மலையடிவாரத்தில் அடர்ந்த காட்டினிடையே இரண்டு காட்டாறுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டபூங்குன்றம் ஒரு சிற்றூ ர். அது, நல்ல மழை நாட்களில் சில தினங்கள் உலகத் தொடர்பே அற்றதொரு தீவு போலாகி விடுவதும் உண்டு.

பூங்குன்றத்தில் மொத்தம் நாற்பது ஐம்பது குடியிருப்புக்கள் இருந்தால், பெரிய காரியம். “என் வாழ்வில் இறுதி ஆண்டுகளை இந்த இயற்கையழகு மிக்க கிராமத்தில்தான் கழிக்கப் போகிறேன்” என்று மகாகவி இளம்பூரணனார், அங்கு குடியேறிய பின்புதான், உலகத்துக்குத் தெரியாத அந்த ஊர் பிரபலமாயிற்று. அதாவது கொஞ்சம் பேர் தெரிந்தது.

மேலநல்லூர் தபாலாபீஸிலிருந்து பூங்குன்றத்துக்குப் பட்டுவாடா ஆக வேண்டிய தபால்களில் பெரும்பாலானவை கவிஞருக்குத்தான் இருக்கும். தபால் பட்டுவாடா செய்யும் பொறுப்பில் இருந்த இளைஞன் குமரகுரு, சுற்று வட்டாரத்துக் கிராமங்கள் எல்லாவற்றிற்கும் போக வேண்டியிருந்தாலும், பூங்குன்றத்துக்குப் போவதிலும், கவிஞரைச் சந்திப்பதிலும் அதிக ஆர்வம் உடையவனாக இருந்தான். காரணம், குமரகுருவே ஓர் இளம் கவிஞன். தணிக் கட்டையான அவன், மேலநல்லூரில் குடியிருக்க அறை என்று எதுவும் கிடைக்காததால், போஸ்ட் மாஸ்டருடைய தயவில் தபாலாபீஸிலேயே, பின் கட்டு அறை ஒன்றில் தங்கிக் கொண்டான். சமயங்களில் அவசரத் தந்தி, பி.சி.ஓ. என்ற வகையில் டிரங்கால் இவற்றுக்கு மெசஞ்சராகவும் அலைய வேண்டியிருக்கும். வேறு எத்தனையோ தபால் ஊழியர்கள் மேல நல்லூருக்கு வந்த முதல் தினத்திலிருந்து வேறு வசதியான நகரங்களுக்கு மாற்றிக் கொண்டுபோவதற்குப் பறப்பார்கள். குமரகுரு அப்படிப் பறக்காததோடு மேலிடத்திலிருந்து தன்னை மாற்றாத வரை அங்கேயே தொடர்ந்து இருக்க விரும்பினான். இரும்புத் துண்டு காந்தத்தால் ஈர்க்கப்படுவது போல் மகாகவி இளம்பூரணரால் அவன் ஈர்க்கப் பட்டிருந்ததுதான் காரணம். அவரது அண்மை அவனுக்குப் பிடித்திருந்தது.