பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி ஒரு கவியின் உள் உலகங்கள் * 1163

 குயில்களும், கிளிகளும் ஒலிக்கும் ஒசைகள் தவிர வேறு செயற்கை ஒலிகளே இல்லாத அந்தத் தீவு போன்ற கிராமத்தில் மரம்,செடி, கொடிகள் அடர்ந்த ஒரு பெரிய தோட்டத்தின் நடுவாக இருந்த சிறிய ஒட்டு வீட்டில் தான் மகாகவி வசித்து வந்தார். அதில் ஒர் எளிய நாட்டுப்புறத்து விவசாயியைப் போல அவரும், அவருடைய மனைவியும் வாழ்ந்தார்கள். வீட்டில் முக்கால்வாசி இடத்தைப் புத்தகங்கள் அடைத்துக் கொண்டிருந்தன. பாரதியாரின் காணிநிலத்தில் வருவது போன்ற குடியிருப்பு அது.

குமரகுரு தபால்களை எடுத்துக்கொண்டுபோகும்போதெல்லாம் பெரும்பாலும் அவரைத் தோட்டத்தில்தான் பார்ப்பான். 'குரு அந்த முல்லைக்கொடி அரும்பு கட்டியிருக்குத் தெரியுமோ?’ என்றோ, 'அன்றைக்கு அந்த ரோஜாப்பதியன் போட்டேனே, அது நன்றாக வேரூன்றிவிட்டது' என்றோ தான் அவனை எதிர்கொள்வார், அவர்.

'இத்தனை வயதிற்கு மேலும் இவரால் எப்படி இத்தகைய குழந்தைத்தனமான அல்ப சந்தோஷங்களால் மகிழ முடிகிறது? - என்று குமரகுருவிற்குப் பெரிதும் வியப்பாயிருக்கும். ஒருமுறை சிரித்துக் கொண்டே அதை அவரிடமே கேட்டுமிருக் கிறான். . .

“இந்தக் குழந்தை மனத்தையும், இப்படிப் பூக்களையும் தளிர்களையும், தாவரங்களையும், இயற்கையையும் பார்த்து மனம் நிறைய மகிழ்ந்து ஆச்சரியப்படும் இயல்பையும் கடைசிவரை நான் இழந்து விடாமலிருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை குரு என்று நான் இந்தக் குணங்களை எல்லாம் இழந்துவிடுகிறேனோ, அன்றிலிருந்து நான் கவிஞனாக இருப்பதற்கில்லை.” என்று அப்போது குமரகுருவிற்கு மறுமொழி கூறியிருந்தார் அவர் தம்முடைய மிகப் பணிவுள்ள சீடனைப் போலப் பழகினாலும், அவர் அவனுடைய பெயரின் பின் பகுதியைச் சொல்லிச் செல்லமாகக் 'குரு' என்றே அவனை அழைத்துவந்தார்.குரு அவருடைய கவிதைகளின் ரசிகன். கவிதைகளைப் போலவே அவருடைய செயல்களையும் ரசித்துக் கவனித்து வந்தான் அவன்.

எங்கு எந்தப் புதுமையைக் கண்டாலும் - அது எவ்வளவு சிறியதாயிருந்தாலும் உடனே ஒரு குழந்தையைப்போல் குதுகலப்படும் அவரை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் அவருடைய தோட்டத்திற்குள் தபால்களோடு நுழையும் ஒவ்வொரு சமயமும் முதல்முறை அவரைச் சந்தித்தது போன்ற அதே ஆர்வத்தோடு தான் நுழைந்தான். புதுமையை வரவேற்கும், புதுமைக்கு வியப்படையும் அவரது மலர்ந்த உள்ளம் அவனைப் போல ஒரு புதிய இளம் கவிஞனையும் வரவேற்று மகிழத் தயாராயிருந்தது. சகஜமாய் அளவளாவத் தயாராயிருந்தது.

'இந்த மருக்கொழுந்துச் செடிக்கு ஆண்டவன் எங்கிருந்து தான் இத்தனை வாசனையைப் படைத்தானோ?” என்று வியப்பார் ஒரு சமயம்.

'இத்தனை நிறத்தில் இத்தனை விதத்தில், இத்தனை மணங்களோடு பூமிக்குள் மறைந்திருக்கும் அழகுகள் ஒவ்வொன்றும் வெளிப்பட்டுப் பூப்பூவாய்ப் பூக்கிறது பார்த்தாயா? என்பார் வேறொரு சமயம் -