பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1168 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பேரனைப் பள்ளிக்கு அனுப்புகிற வயதில் மறுபடி கனகசபை அவருக்கு எழுதியிருந்தான். படிப்பதற்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவர் பெயரைத் தாங்கிக் கொண்டு அமெரிக்காவில் ஒரு தளிர் பெருமிதப்பட்டார்.

அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு இலங்கைக்குப் போய் இலங்கையிலிருந்து அப்படியே சிங்கப்பூர் மார்க்கமாகக் கனகசபை திரும்ப திட்டமிட்டிருந்தான். கிழவரைப் பார்ப்பதற்காக அவன் வரகுப்பட்டிக்கு வந்து திரும்ப வேண்டுமென்றால் மேலும் ஐந்தாறு நாட்கள் செலவாகும். பத்துப் பதினைந்து நாள் லீவில் வருகிற மகனுக்குச் சிரமம் வைக்க வேண்டாம் என்று அவரே சென்னைக்குப் போய் அவன் தங்குகிற ஹோட்டலில் அவனையும், மருமகளையும், பேரப்பிள்ளையையும் பார்த்துவரத் திட்டமிட்டிருந்தார்.

எப்போதுமே குழந்தைகள் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். பென்ஷன் பணத்திலிருந்து செலவழித்து மிட்டாய் வாங்கிக் காந்தி ஜெயந்தி அன்றைக்கும், சுதந்திர தினத்தன்றைக்கும் வருடம் தவறாமல் பள்ளிக்கூடத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்வார் வேதகிரி. சில ஏழைக் குழந்தைகளுக்குத் தம் செலவில் பாடப் புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும்கூட வாங்கியளித்து வந்தார் அவர்.

இப்போது சொந்தப் பேரனையே போய்ப்பார்க்கப் போகிறார். பேரனுக்கு என்ன வாங்கிக் கொண்டு போய்ப் பார்ப்பதென்று யோசித்தார். கை முறுக்கு முதலிய எண்ணெய்ப் பலகாரங்கள் செய்து விற்கும் பணியாரக் கடை ஆச்சியிடம் சொல்லி முறுக்கு, சீடை, வெல்லச்சீடை, பொரிவிளங்காய் எல்லாம் ஸ்பெஷலாகத் தயாரிக்க ஆர்டர் கொடுத்தார். அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் பேரனுக்குத் தமிழ்நாட்டின் சுவையான பணியாரங்கள் வாய்க்கு ருசியாக இருக்கும் என்பது அவரது நம்பிக்கையாயிருந்தது.

மொறுமொறுவென்று தேங்காய் எண்ணெய் வாசனை கமகமக்க ஒரு பெரிய எவர்சில்வர் சம்புடம் நிறையப் பட்சணங்களை நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டாள் ஆச்சி. தனக்குச் சேர வேண்டிய பணத்தையும் கிழவரிடமிருந்து கணக்குத் தீர்த்து வாங்கிக் கொண்டு போய்விட்டாள். . கிழவர் சென்னைக்குப் போய் மகனையும், மருமகளையும், பேரனையும் சந்திக்கப் போவதைப் பற்றிய கற்பனைகளில் மூழ்கினார். பேரனைக் கபாலீசுவரர் கோயில், மெரீனா கடற்கரை, அடையாறு ஆலமரம் எல்லாவற்றுக்கும் அழைத்துக் கொண்டு போய்க் காட்ட வேண்டும் என்றும் எண்ணினார். மகனுக்கும் மருமகளுக்கும் வேறு வேலையிருந்தாலும் தானே ஒர் ஆட்டோ ரிக்க்ஷாவில் பேரனை அழைத்துப் போய்ப் பிரியத்தோடு எல்லாம் சுற்றிக் காட்டவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அந்த நினைப்பே படு சுகமாயிருந்தது.

அவர் சென்னைக்கு ரெயிலேற வேண்டிய மாலை நேரமும் வந்தது. பட்சணச் சம்புடம், பேரனுக்குக் காட்டுவதற்காக மகனைப் பெற்ற சில ஆண்டுகளிலேயே காலமாகிவிட்ட தன் மனைவியின் அதாவது அவனுடைய பாட்டியின் படம்,