பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான் * 1169

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ரெயிலேறினார். மனம் நிறையப் பாசம். வற்றி வறண்டு கிழடு தட்டிய அந்த உடல் நிறைய உற்சாகத்தை உண்டாக்கிக் கொண்டு பயணத்தைத் தொடங்கினார் அவர் தனியாகப் பயணம் செய்வதற்கு ஏலாத வயதுதான். ஆனாலும் பேரனைக் காணும் ஆசையில் துணிந்திருந்தார்.

'நீ என்னை எதிர்கொண்டு வரவேற்க ஸ்டேஷனுக்கு வரவேண்டும் என்ற அவசியமில்லை. நான் புறப்பட்டு வருகிற செங்கோட்டைப் பாஸஞ்சர் எழும்பூருக்கு அதிகாலையில் வருகிறது. அந்த நேரத்துக்கு நீ தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு சிரமப்பட வேண்டாம். நானே ரெயிலிலிருந்து இறங்கி ஹோட்டலுக்கு வந்துவிடுகிறேன்’ என்று மகன் கனகசபைக்கு அவன் வந்து தங்கப் போவதாகக் குறித்திருந்த ஹோட்டல் விலாசத்துக்கு ஒரு முன் கடிதமும் எழுதிப் போட்டிருந்தார் கிழவர். ஆனாலும் தன் மேலுள்ள மரியாதை காரணமாக அவன் ஸ்டேஷனுக்கு வந்தாலும் வரக்கூடும் என்று அவர் மனம் எதிர்பார்த்தது. தன் மகனை மணந்தபிறகு அந்தப் பெண்ணை அதாவது புதிய மருமகளை அவர் இப்போதுதான் முதல் முதலாகப் பார்ப்பதால் அவள் தன் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெறக்கூடும் என்றும் தோன்றியது. 'ஆல் போலத் தழைத்து அறுகுபோல் வேரோடிப் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!” என்று அவளை மனம் நிறைய வாழ்த்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்ததால் இந்திய மரபுகள், மரியாதைகள், பற்றித் தன் மகனே பேரனுக்கு எடுத்துச் சொல்லி, டேய் தாத்தாவை கால்லே விழுந்து சேவிச்சு ஆசீாவாதம் வாங்கிக்கனும்டா என்று வற்புறுத்துவான் என்று நடக்கப் போகும் காட்சிகளைக் கற்பனையில் எண்ணிப் பார்த்துக் கொண்டார் கிழவர். “அமெரிக்காவிலேர்ந்து, பிள்ளையும் மாட்டுப் பெண்ணும் பேரனும் மெட்ராஸ்வரா! போய்ப் பார்க்கணும்” என்று குறைந்தது நூறு பேரிடமாவது தினமும் சொல்லியிருப்பார் அவர்.

சென்னையில் அவர்கள் இருக்கப் போவது வெறும் நாற்பத்தெட்டு மணி நேரங்களே. அதிலும் ஒரு நாள் கழிந்திருக்கும். அவர் போய்ச் சேரப் போவதே இரண்டாம் நாள் காலையில்தான்.அவரைச் சந்திக்கிற தினத்தன்று மாலையிலேயே 6 மணிக்கு அவர்கள் கொழும்புக்கு விமானம் ஏற வேண்டும். இரவு 9 மணிக்கு அவர் ஊர் திரும்ப ரெயில் இருந்தது. அவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு வந்து கிழவர் திரும்பவும் கிராமத்துக்கு ரெயிலேற வேண்டியதுதான். பார்க்கப் போனால் அவர்களோடு.அவர் கழிக்கப் போவது பன்னிரண்டு மணி நேரத்துக்கும் குறைவான அவகாசம்தான்! ஆனாலும் என்ன?அமெரிக்க மழலைத்தனம் மாறாத குரலில் அந்தச் சிறுவன் 'தாத்தா' என்று கூப்பிடப் போகும் ஒரு விநாடியின் மகிழ்ச்சி என்பது அப்படியே ஒரு யுகத்துக்கு நீடிப்பதுபோல் தோன்றாதா? அந்த மகிழ்ச்சியில் கால ஒட்டமே திகைத்துத் தேங்கி நின்று போகாதா? இனிய நினைவுகளிலும் கற்பனைகளிலுமாக ரெயில் பெர்த்தில் அவர் புரண்டு புரண்டு படுத்தார். துக்கமே வரவில்லை. அன்று ரெயில் சென்னையை அடையத் தாமதமாகிவிட்டது. எழும்பூரில்

நா.பா II -35