பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1170 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

போய் நின்றபோது காலை ஏழு மணி ஒரு கையில் பட்சணச் சம்புடமும், இன்னொரு கையில் துணி மூட்டையுமாக இறங்கிய இவர், 'மகன் ஸ்டேஷனுக்கு வந்திருப்பானோ' என்ற அச்சானியத்தோடும், ஆதங்கத்தோடும் பத்து நிமிஷம் நின்று, பிளாட்பாரம் காலியாகிற வரை இருபுறமும் கண்களால் துழாவித் துழாவிப் பார்த்தார், ஊஹும் அவன் வரவில்லை.

தன்னுடைய மகன் தங்குவதாக எழுதியிருந்த இன்டெர் கான்டினென்டல் ஒட்டலுக்குப் போக ஒர் ஆட்டோ ரிக்க்ஷா வாடகை பேசி ஏறினார் கிழவர்.

நீர்க்காவியேறிய பழுப்பு வேஷ்டியும், சட்டையும், காதில் சிவப்புக்கல் கடுக்கனும், ஒரு பக்கத்துக் கம்பி ஒடிந்து பழைய பூணூல் கயிற்றால் காதில் இழுத்துக் கட்டிய மூக்குக் கண்ணாடியும், துணிமுட்டையும், சம்புடமுமாக வந்து இறங்கிய கிழவரை ஹோட்டல் ரிஸப்ஷனில் வெறித்துப் பார்த்தார்கள். ஆட்டோவில் வராமல் நடந்து மட்டும் வந்திருப்பாரானால் ,"இது ஒட்டல்! இங்கே பிச்சை போடமாட்டாங்க.போ என்று வாட்ச்மேன் சொல்லி வெளியே துரத்தியிருப்பான்.

“அமெரிக்காவிலேருந்து கனகசபைன்னு என் ஸன் இங்கே தங்கியிருக்கான்” என்று அவர் கூறியதும் “வி.கே.சபாய் தானே? ரூம் நம்பர் ஒன் நாட் டு - தேர்ட் ஃப்ளோர்”' என்றாள் ரிஸப்ஷன் பெண்மணி, லிஃப்ட் பாயைக் கூப்பிட்டு அவரை அழைத்துப் போக ஏற்பாடு செய்தாள். அறை முகப்பை நெருங்கியதும் மகிழ்ச்சிப் பரபரப்பு என்பார்களே அதில் முற்றத் திளைத்திருந்தார் அவர். மனம் வேகமாக அடித்துக் கொண்டது. லிஃப்ட் பையன் அறை முகப்பில் இருந்த 'காலிங் பெல்லை’ அவருக்குக் காட்டிவிட்டுச் சென்றான். மகிழ்ச்சியின் மிகுதியில் பதறும் கைகளோடு காலிங் பெல்லை அழுத்தினார் கிழவர்.

நீண்டநேரம் மணியை அழுத்திய பின்பும் உள்ளிருந்து பதிலே இல்லை. தந்தை கிராமத்திலிருந்து வரப்போகிறார் என்ற ஆர்வத்தில் மகனும், பேரனும் சீக்கிரமே விழித்தெழுந்து காத்திருப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் வேதகிரி, ஏமாற்றம்தான் மிஞ்சியது.

நீண்டநேரத்துக்குப்பின் கடைசியில் மகன்தான் வந்து கதவைத் திறந்தான். முதல் ஒரு விநாடி அவரை அவனுக்குப் புரியவே இல்லை. "யாரைப் பார்க்கணும்?” என்று யாரோ அந்நியமான ஒருவரை விசாரிப்பது போல் விசாரித்த அவனை, “நான் தாண்டா - உங்கப்பா வந்திருக்கேன்” - என்று அவர் முந்திக் கொண்டு சொல்ல வேண்டியதாயிற்று.

“உள்ளே வாங்கோ...” என்று சுதாரித்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே 'நைட்டி’யுடன் தூங்கி எழுந்த கோலத்தில் ஒர் இளம் பெண் காபி அருந்திக் கொண்டிருந்தாள். ஜீன்ஸும் 'ஐயாம் ஃப்ரம் டெக்ஸாஸ்' என்ற ஆங்கில வாசகத்தோடு கூடிய பனியனும் அணிந்த பையன் ஒருவன் சோபாவில் சாய்ந்து எதிர்த்த சோபாவில் காலைத் தூக்கிப் போட்டபடி நியூஸ் பேப்பரில் மூழ்கி இருந்தான்.