பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / அமெரிக்காவிலிருந்து பேரன் வருகிறான் 1171

கால்களில் முரட்டுக் கான்வாஸ் ஷூ. ஜீன்ஸில் அங்கங்கே வட்டவட்டமாகத் தோலில் ஒட்டுத் தையல் வேறு.

“பிரேமா! அப்பா கிராமத்திலேயிருந்து வந்திருக்கார்” என்று நைட்டி அணிந்து காபியருந்திக் கொண்டிருந்த பெண்ணிடம் கனகசபை கூறியவுடன் "ஹலோ' என்று கிழவரை நோக்கி முகம் மலர்ந்தாள் அவள். அவன் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதிலிருந்து அவள் தான் அவனுடைய மனைவி என்பதும் புரிந்தது. கலியாணமான பின் முதல் முதலாகக் காணும் தன்னை ஆசி வேண்டி அவர்கள் சேர்ந்து வணங்காததே வியப்பாயிருந்தது அவருக்கு.

"உட்காருங்கோ” என்று அவரை ஒரு சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு இன்டர்காமில் மேலும் ஒரு காபிக்கு ஆர்டர் செய்தான் மகன். சோபாவில் சரிந்தாற்போல் அடுத்த சோபா மேல் கால்களைத் தூக்கிப் போட்டபடி தினசரியில் மூழ்கியிருந்த பேரனின் கான்வாஸ் ஷூப் பாதங்கள் இவரது முகத்தருகே துருத்திக் கொண்டிருந்தன. ஏதோ சகஜமற்ற இறுக்கம் ஒன்று அவர்களுக்கிடையே நிலவியது. நீண்ட காலத்துக்குப் பின்னால் சந்திக்கும் தகப்பனுக்கும் மகனுக்கும் இடையிலான நெகிழ்ச்சியோ, பாசமோ, பந்தமோ, உறவின் இளகலோ அதில் இல்லை. பழுப்பு நிற வேஷ்டியும், ஷேவ் செய்யாத முகமும், ஒடிந்த மூக்குக் கண்ணாடியும், மூட்டை முடிச்சுக்களுமாக அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் அறைக்குப் பொருந்தாத ஒர் ஆளை அங்கே எதிர்கொள்ள விரும்பாத தயக்கமே தெரிந்தது.

பேரன் ஒரு நிமிஷம் தினசரியிலிருந்து தலையை நிமிர்த்தி ஒர் அபூர்வ மிருகத்தைப் பார்ப்பது போல் கிழவரை வெறித்துப் பார்த்தான். பின்பு கனகசபையின் பக்கம் திரும்பி அமெரிக்க உச்சரிப்பின் கொழகொழப்பான முழுமையோடு, “ஷூ இஸ் திஸ் டர்ட்டி ஒல்ட் மேன் யா?” என்று கேட்கவும் கனகசபை சிறிது பதறி, “டோண்ட் ஸே லைக் தட் ஹி இஸ் யுவர் கிராண்ட் ஃபாதர்” என்று அவசர அவசரமாகக் குறுக்கிட்டான். அதை அறிந்த பின்னும் பேரன் கால்களைத் தூக்கிப் போட்டு அட்டகாசமாக இருந்ததில் மாற்றம் எதுவுமில்லை. கனகசபை கூறியதற்கு ஒரு பதில் 'யா'வுடன் மறுபடி தினசரியில் மூழ்கிவிட்டான் அவன்.

கிழவர் வேதகிரிக்கு ஒரே அதிர்ச்சி. கல்லில் தேடிவந்து தாமே முட்டிக் கொண்டது போலிருந்தது அவருக்கு.

"அப்பா! தப்பா நெனைச்சுக்காதீங்கோ! இந்தக் காலத்துப் பசங்களுக்கு மட்டு மரியாதை எல்லாம் தெரியறதில்லே.” என்று பேரனுக்காக மகன் அவரிடம் மன்னிப்புக் கேட்டான்.

பேரனை அங்கம் அங்கமாகத் தொட்டுக் கொஞ்சும் ஆசையோடு வந்த அவருக்கு நெஞ்சு வலித்தது. கலாச்சார ரீதியான இந்தியத் தன்மையின் பற்று, பாசம் எதுவுமே அவர்களிடம் தெரியவில்லை. மகன் கனகசபை மட்டும் ஏதோ உதட்டளவில் அவரை விசாரித்தான்.