பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/552

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1174 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

"ஸ்டேஷனுக்கு அப்புறம் போகலாம்! முதல்லே இதைச் சாப்பிடுடா குழந்தை!”

பையன் பயந்து தயங்கியபடியே ஒரே ஒரு வெல்லச் சீடை மட்டும் எடுத்துக் கொண்டான்.

"அவ்வளவும் உனக்குத்தான் பயப்படாமே நிறைய எடுத்துச்சாப்பிடுடா கண்ணு”

அவன் மேலும் எடுத்துக் கொண்டான். இப்போது பரட்டைத் தலையும் கிழிசல் பாவாடையுமாக ஒரு சிறுமி அருகே நிழலாடினாள்.

“தாத்தா, எனக்கில்லையா?”

"நீயும் எடுத்துக்கோம்மா." மூக்குச்சளி ஒழுக மற்றொரு சிறுவன் வந்தான்.

"தாத்தா. தாத்தா. பல குழந்தைகள் அவரை மொய்த்தன.

சம்புடம் காலியாகிற வரை எல்லாக் குழந்தைகளுக்கும் வாரி வாரி வழங்கினார் கிழவர் வேதகிரி.

செவி நிறையத் 'தாத்தா -- தாத்தா' என்று பிஞ்சுக் குரல்கள் ஒலித்து அவரை மகிழ்வித்தன.

அமெரிக்காவிலிருந்து வந்த சொந்தப் பேரனை இப்போது அவர் மறந்து போய்விட்டார். எழும்பூர் இரயில் நிலையப் பிளாட்பாரத்தில் தற்செயலாகச் சந்தித்த இந்தப் புதிய பேரன்கள் பேத்திகள் அவரை மனநிறைவோடும் நன்றி விசுவாசத்தோடும் பிரியமாக இரயிலேற்றி ஊருக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.

(கலைமகள், தீபாவளிமலர், 1985)