பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163. களவும் கற்று…

ண்பர்கள் எல்லாரும் விடை பெற்றுச் சென்ற பின் புலவர் அவனைக் கண்டித்தார்.

“இவ்வளவு வெளிப்படையா எல்லாத்தையும், எல்லாரிடமும் மனந் திறந்து பேசிக்கிட்டிருந்தா, அரசியல்லே உங்க எதிரிங்க உங்களை ரொம்ப சுலபமா நசுக்கிப்பிடுவாங்க, ஜாக்கிரதை.”

“அது சரிதான்! ஆனா அதுக்காக ஒரு நேர்மையான அரசியல்வாதி தனக்கு வேண்டியவங்க கிட்டக் கூட வஞ்சகமாகவும், கபடமாகவும், நடந்துக்கலாங்கிறதை நான் ஒப்புக் கொள்ள முடியாது புலவரே! உண்மையைப் பேசப் பயமும் தயக்கமும் எதற்காக?”

“வஞ்சகம் வேண்டாம்கிறது எனக்கும் உடன்பாடுதான். ஆனாக் கபடம் வேணும்! கபடமே இல்லாட்டி, அரசியலில் ஆளையே முழுங்கி ஏப்பம் விட்டுடுவாங்க”

“அப்புறம் நமக்கும் - நாம் யாரை எல்லாம் எதிர்க்கிறோமோ அவங்களுக்கும் என்ன வித்தியாசம்?” -

“வேற்றுமை வித்தியாசம்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எல்லாத் தரப்பு அரசியல்வாதிக்கும் ‘ராஜதந்திரம்’ அவசியம் வேணும். இல்லாட்டி மேலே போகப் போகச் சிரமம்! இன்னிக்கி நிலமை அப்படி ஆயிப் போச்சு.”

வயது முதிர்ந்தவரும், அனுபவம் நிறைந்தவருமான புலவர் திரும்பத் திரும்பத் தான் முதலில் கூறியதையே வற்புறுத்தினார். திருக்குறள் படித்த புலவரா இப்படிப் பேசுகிறார்? கண்ணப்பனுக்கே வியப்பாயிருந்தது.

இன்று அரசியலில் முன்னணியில் இருப்பவனும், ஒருகாலத்தில் புலவரின் மாணவனுமாகிய கண்ணப்பன் ஒழுக்கமும், நேர்மையும் நிறைந்தவன். அரசியலில் லஞ்சமும், ஊழலும் ஒழிந்து ஏழை எளியவர்களுக்கு நலங்களும், நியாயங்களும் கிடைக்க வேண்டும் என்று பாடுபடுகிறவன். அப்படிப் பட்டவனுக்குக் கபடம் இல்லாத அரசியல் இன்று பயன்படாது என்று தன் ஆசிரியரான புலவரே கூறியது மீண்டும் வியப்பை அளித்தது. அவன் புலவரோடு கடுமையாக எதிர்வாதம் செய்தான்.

“அவங்க பொதுச் சொத்தை திருடறாங்க, ஊரைக் கொள்ளையடிச்சு உலையிலே போடறாங்கன்னு சொல்லித்தானே நாமே இந்தப் புது இயக்கத்தையே ஆரம்பிச்சோம்? இப்போ நாமே கபடமா இருக்கணும்னா எப்படி?”

“அதெல்லாம் சரிதான்! ‘களவும் கற்று மற’ங்கிற பழமொழி உங்களுக்கு நினைவிருக்கணும் தம்பீ! அந்தப் பழமொழியே அரசியலுக்காகவும், அரசியல்வாதிகளுக்காகவும் தான் ஏற்பட்டதுங்கறதை நீங்க ஞாபகம் வச்சுக்கணும்.