பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1176 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

"ஒண்ணைக் கற்றால் அதைக் கடைசி வரை ஞாபகம் வச்சுக்கிட்டுக் கடைப் பிடிக்கனும் புலவர் ஐயா! மறக்க வேண்டிய ஒண்ணைச் சிரமப்பட்டுக்கத்துக்கிறதோ, சிரமப்பட்டுக் கத்துக்கிட்ட ஒண்ணை மறக்கிறதோ எனக்குப் பிடிக்காதுங்கிறது உங்களுக்கே நல்லாத் தெரியுமே!”

புலவர் இதைக் கேட்டு பதில் எதுவும் சொல்லாமல் புன்முறுவல் பூத்தார். கண்ணப்பனுடைய உறுதி அவருக்கே வியப்பை அளித்தது. உண்மையிலேயே இதே கொள்கைகளையும் உறுதியான இலட்சியங்களையும் எல்லா நாட்களிலும் அவன் விடாப்பிடியாகக் கடைப்பிடிக்க முடியுமானால் அவருக்கும் மகிழ்ச்சியாய்த்தானிருக்கும். கபடமும் வஞ்சகமும் லஞ்சமும் ஊழலும் கொழுத்துப்போன ஒரு கட்சியிடமிருந்து பிரிந்து வந்துதான் அவன் இந்தப் புதுக்கட்சியைத் தொடங்கியிருந்தான். இதற்கு மக்கள் ஆதரவு பெருகியிருந்தது. கண்ணப்பன் போகிற இடமெல்லாம் வெள்ளமாய்க் கூடினர் மக்கள். லஞ்ச ஊழல்களை ஒழிக்க வந்த அவதாரபுருஷனாக அவனை எல்லாரும் மதித்தார்கள்.விரைவில் வர இருந்த பொதுத் தேர்தலில் கண்ணப்பனின் புதிய கட்சியே பெருவாரியாக வெற்றி பெற்று மாநிலத்தின் ஆட்சியைக் கைப்பற்றிவிட முடியும் என்கிற அளவு பரவலாக ஒரு நம்பிக்கை எல்லார் மத்தியிலும் ஏற்படத் தொடங்கியிருந்தது. ஆட்சியிலிருந்த கண்ணப்பனின் எதிரிகள் கதிகலங்கிப் போயிருந்தனர். பத்திரிகைகள் எல்லாமே ஒட்டு மொத்தமாக அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது கண்ணப்பனின் புதிய கட்சிதான் என்று எழுதத் தொடங்கியிருந்தன. நிலைமையும் கண்ணப்பனுக்குச் சாதகமாகத்தான் இருந்தது.

ஆட்சியில் இருந்த கண்ணப்பனின் எதிரிகள் அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அடிப்பது, உதைப்பது, வெட்டுவது, கைது செய்து பொய்க்குற்றம் சாட்டிச் சிறையிலடைப்பது போன்ற காரியங்களைஅளவு கடந்து செய்ததால் மக்களின் பரிவும், அனுதாபமும் வேறு கண்ணப்பன் பக்கமே திரும்பின.

அவனுடைய வெற்றிக்கு அவன் பாடுபட்டதை விட அவனுக்கு அதிக இடையூறுகளைச் செய்வதன் மூலம் அவன் எதிரிகளும் கூடப் பாடுபட்டனர்.

ஒரு வழியாகத் தேர்தலும் வந்தது. பரபரப்பான பிரச்சார நாட்களும் கழிந்தன. அடிதடிகள், வன்முறைகள், குத்து, வெட்டு, சாராயப் பெருக்கு, பரஸ்பரம் சேற்றை வாரி இறைத்தல், எல்லாவற்றிற்கும் பின் தேர்தலும் முடிந்தது. முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.

யாருமே நம்ப முடியாத அளவு இருநூற்று ஐந்து மொத்த இடங்களில் இருநூற்று ஒன்றைக் கண்ணப்பனின் கட்சி பிடித்துவிட்டது. முன்னாள் ஆளும் கட்சியும் கண்ணப்பனின் எதிரிகளும் மொத்தம் மூன்றே மூன்று தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்திருந்தது. மீதி ஓர் இடத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுவிட்டார். ஒரே ஒர் இடத்தில்தான்.

வெற்றி பெற்ற கண்ணப்பனைச் சந்தித்துப் புலவர் மாலையணிவித்து வாழ்த்தினார். "எதிர்பார்த்ததைவிட மகத்தான வெற்றி இது மக்களின் நம்பிக்கைக்குப்