பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1178 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

நிர்வாகம், ஏழைகளுக்கான இலவசத் திட்டங்கள் எல்லாமே நல்ல பேர் வாங்கித் தந்து கொண்டிருந்தன.

மூன்றாவது ஆண்டின் தொடக்கத்தில் மந்திரிகளின் சம்பளத்தை ஆயிரத்தைந்நூறு ரூபாயாகச் செய்தார்கள். விலைவாசி உயர்வு காரணமாகச் சொல்லப்பட்டது. சைக்கிளில் போவதில் செக்யூரிட்டி ரிஸ்க் இருப்பதாகக் காவல்துறையினர் சொல்வதாகக் கூறி மந்திரிகளுக்குக் கார்கள் ஒதுக்கப்பட்டன. பெரிய பெரிய கார்களே கிடைத்தன.

குடிசைவாசிகள், ஏழைகள், எளியவர்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை நடத்தப் பணம் தேவை என்று கள், சாராயம், போதைப் பொருட்கள் விற்கும் கடைகளை அரசாங்கமே திறந்தது. கட்சி ஆட்களே அவற்றைக் குத்தகைக்கு எடுத்தார்கள்.

"என் தாய் மேலாணை! தமிழ் மேலாணை! ஏழைகளின் வாழ்வைப் பாழாக்கும் கள், சாராயக் கடைகளை நிரந்தரமாக மூடுவதே எங்கள் கொள்கை -என்று தேர்தல் உறுதி மொழியில் வாக்களித்திருந்த கண்ணப்பனே இப்போது அதை மறந்திருந்தான். சாராயக் கடைகளை மூலைக்கு மூலை திறந்திருந்தான்.

எப்படியோ ஆண்டுகள் ஒடி முடிந்தன. அடுத்த பொதுத் தேர்தலும் வந்தது. மறுபடியும் கண்ணப்பனின் கட்சியே பெருவாரியாக வெற்றி பெற்றது.

இம்முறை கட்சி வளர்ச்சிக்காக வியாபாரிகளிடமும், தொழிலதிபர்களிடமும் பணம் வாங்குவது தவறில்லை என்ற முடிவைக் கண்ணப்பனே இரகசியமாக மற்றவர்களுக்கு அறிவித்தான். கட்சியை நடத்த, எதிர்க்கட்சியின் பலத்தைக் குலைக்க எல்லாவற்றுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மெல்ல மெல்ல மந்திரிகளும், கட்சி முக்கியஸ்தர்களும் கூடப் பணவேட்டையில் இறங்கினார்கள். மெடிகல் காலேஜ் சீட் முதல் பாலிடெக்னிக் அட்மிஷன் வரை எல்லாவற்றிற்கும் 'ரேட்'கள் ஏற்பட்டன. கோடிக்கணக்கான அயிட்டங்களைக் கண்ணப்பனே நேரில் வாங்கினான். லட்சங்களை மற்றவர்கள் பார்த்துக் கொண்டார்கள். ஸ்விஸ் பாங்கில் கணக்கு ஏற்பட்டது. லஞ்சம் வாங்குவதிலும், பணம் பண்ணுவதிலும் இதற்கு முந்திய எல்லா அரசுகளையும் விடப் படுவேகத்தில் முன்னேறிவிட்ட பெருமை கண்ணப்பனின் அரசிற்குக் கிடைத்தது.

ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் முன்பு மரூஷியஸ் சென்றிருந்த புலவர் மேலும் சில ஆண்டுகள் ஒப்பந்தம் நீடித்தபின் அதுவும் முடிந்து ஒய்வுபெற்றுத் தாய்நாடு திரும்பினார்.

தாய்நாடு திரும்பியதும் முதல் வேலையாகத் தனது பணிவுள்ள மாணவனும், மாநிலத்தை ஆள்பவனுமாகிய கண்ணப்பனைச் சந்திக்க விரும்பினார். சந்திப்பது அவ்வளவு சுலபமாயில்லை. நாட்கள் கடந்தன. கேள்விப்பட்ட விஷயங்கள் அவருக்கு எரிச்சலூட்டின. கண்ணப்பனும், சக அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் லஞ்சத்தையே ஒரு வாழ்க்கை முறையாக்கி விட்டதாகத் தெரிந்தது. மனம் வெதும்பினார் புலவர்.