பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / களவும் கற்று... 1179

அரும்பாடுபட்டுப் பல நாள் காத்திருந்து எப்படியோ முதல்வர் கண்ணப்பனிடம் ஒரு நிமிஷ இண்டர்வியூவுக்கு நேரம் வாங்கிவிட்டார் புலவர். அதற்கே முதல்வரின் காரியதரிசி, பி.ஏ.எல்லாரிடமும் தங்களது ஆதிநாளைய அந்தரங்க நட்பைச் சொல்லிக் காலில் விழாத குறையாகக் கெஞ்ச வேண்டியிருந்தது. ஒரு நிமிஷத்தில் கண்ணப்பனிடம் கேட்க வேண்டியவற்றை எல்லாம் வரிசையாக நினைவுபடுத்திக் கொண்டார் புலவர்.

கண்ணப்பன் அவரைக் கட்டித் தழுவி வரவேற்றான். அட்டகாசமாக நலம் விசாரித்தான். அவருக்கோ எவ்வளவோ முயன்றும் அவன் முன் சிரிப்பே வரவில்லை. அவன் நடிப்பதுபோல் அவருக்கு நடிக்க வரவில்லை. 'அரசியல்வாதிக்கும் கொஞ்சம் கபடம் தேவை - களவும் கற்று மறக்க வேண்டும்’ என்று அன்றைக்குத் தான் கூறியதையே தன்னிடம் எதிர்த்துக் கண்டித்த அவன் இன்று எப்படி இருக்கிறான் என்பதை எண்ணியபோது அவனது முகத்தை இயல்பாகப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது அவருக்கு அவனைத் தன் பழைய மாணவனாக எண்ணிடக் கூட வெட்கமாக இருந்தது அவருக்கு.

அவர் அவனைக் கேட்டார்; கடுமையாகவே கேட்டார்.

“முன்னாலே இருந்தவங்க மாதிரி ஆயிடாமே லஞ்ச ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமைக்கப் போறேன்னு சொன்னது ஞாபகம் இருக்கா?”

“எப்போ சொன்னேன் அப்பிடி?”

“களவும் கற்று மறக்கணும்னு பழமொழி இருப்பதை நினைவூட்டி அரசியலுக்குக் கொஞ்சம் கபடமாவது வேணும்னு நான் சொன்னப்போ எனக்கு அன்னிக்கி நீங்க சொல்லியிருந்த பதில் அது...”

“அது சரி பழசெல்லாம் விட்டுத் தள்ளுங்க புலவரே! இப்ப என்ன வேலையா வந்தீங்க? உங்களுக்கு நான் என்ன செய்யணும்? சொல்லுங்க”

அவருக்கு ஒரே பிரமிப்பு! எப்படி மாறிவிட்டான்? 'களவும் கற்றுமற' என்பதுதான் பழமொழி. இவனோ இந்த ஆறேழு ஆண்டுகளில் களவைத் தவிர வேறு எல்லாவற்றையுமே மறந்திருக்கிறான்.

அரசாங்க நாற்காலிகளில் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். நாற்காலிகளில் போய் உட்காருகிறவரை நியாயம் பேசுகிற ஒவ்வொருவனும் நாற்காலிக்குப் போனதும் மக்களையும், நியாயங்களையும் மறந்துவிடுகிறான்.

முதல்வரின் பி.ஏ. குறுக்கிட்டான். “உங்கள் பேட்டிக்கு ஒதுக்கிய நேரம் முடிந்துவிட்டது."

“நன்றி! வருகிறேன்” என்று முதல்வரையோ பி.ஏ.யையோ திரும்பிப் பாராமல் சரேலென்று உடனே அங்கிருந்து வெளியேறினார் புலவர்.

(போல்டு இந்தியா, தீபாவளி மலர், 1985)