பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1184 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சொல்லிக்கோ! கவி எழுதற திறமையே எனக்குக் கிடையாதுன்னு நீ சொல்லிட்டாப் போறும்.”

“அதெப்படி முடியும்? நமக்குக் கெடுதல் வருதுங்கிறதுக்காக நம்ம திறமையை மறைக்க முடியாது. நம்மை நாமே கொலை பண்ணிக்கிறதுங்கிறது அடுத்தவனைக் கொல்றதைவிட மோசமான காரியம். நான் அதைச் செய்யமாட்டேன்.”

அவன் பிடிவாதமாயிருந்தான். அவன் மேல் அனுதாபமுள்ளவர்களாலே கூட அவனைத் திருத்தவோ, மாற்றவோ முடியவில்லை.

கல்லூரி டிபார்ட்மெண்டல் என்குயரி, போலீஸ் என்குயரி, நீதி விசாரணை, எல்லாவற்றிலும் அவன் தனது பிடிவாதப்படியே அந்தக் கவிதைகளை எழுதியவன் தானே என்று கர்வத்தோடு நிமிர்ந்து நின்று சொந்தம் கொண்டாடினான். அடித்துச் சொன்னான். நிரூபிக்கக்கூட முற்பட்டான்.

வக்கிர குணமுள்ள பேராசிரியை அவனை வம்பில் மாட்டி வைத்ததோ, எப்போதோ அவன் எழுதிய புரட்சிக் கவிதையை யாரோ யாரையோ கொலை செய்த இடத்தில் கண்டது அவன் குற்றமில்லை என்பதோ வெளிப்படவே வழி பிறக்கவில்லை. பேராசிரியையிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காகவும்; ஒரு கொலைக்குத் தூண்டியதற்காகவும் அவன் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றான். விலங்கு மாட்டி அவனை இழுத்துச் சென்றார்கள்.

அவன் ஜெயிலுக்குப் போனான். தலைநிமிர்ந்து கர்வத்தோடு போனான். பத்து ஆண்டுகளுக்குப் பின் அவன் மறுபடி விடுதலையாகி வெளியே வருகிறபோது இந்நாட்டுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அவனை ஒரு மகாகவியாக வரவேற்கத் தெரிந்து கொண்டிருக்கும். அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் அதற்கு அவன் என்ன செய்ய முடியும்? நாட்டின் எத்தனையோ பல துரதிர்ஷ்டங்களில் அதுவும் ஒன்றாயிருக்கும்.

(சிறுகதைக் களஞ்சியம், 1986)