பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/564

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1186 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

உடனே கமிட்டியிலிருந்த வைஸ்-சான்ஸ்லர் ஒருவருக்குத் தமக்குத் தெரிந்ததைச் சொல்லாவிட்டால் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.

“லத்தீன் அமெரிக்காவில் சிலி நாட்டில் குழாய் ரிப்பேர்க்காரரான ப்ளம்பர் ஒருவர் - ஸில்வியா பிளம்பர் என்று 'மிகப்பெரிய புரொக்ரஸிவ் கவிஞராக விளங்கி வருகிறார். இக்கருத்தரங்கிற்கு அவரையும் அழைக்க வேண்டும் என்பது என் கருத்து' - என்றார் துணைவேந்தர்.

அந்தக் கூட்டத்தில் அதை யாரும் ஆட்சேபிக்க முன் வரவில்லை. ஒரு துணைவேந்தரை யாராவது ஆட்சேபிக்க முடியுமா, என்ன?

கமிட்டியின் மற்றோர் அங்கத்தினர் ஆன ஜைனுத்தீன்பாய் எழுந்து, "சிறுபான்மை மதப்பிரிவைச் சேர்ந்த வகுப்பினரை இந்தச் சங்கம் நீண்டநாட்களாகவே புறக்கணித்து வருகிறது. “மஸ்காட்டி'ல் மாமிசக் கடை வைத்திருக்கும் ஹலால்புட்சர் ஒருவர் 'அல்-அமீன்' என்று மிகச்சிறந்த அரபுமொழிக் கவிஞராக இன்று விளங்கி வருகிறார். இந்தக் கருத்தரங்கிற்கு 'அல்அமீன்' கண்டிப்பாக அழைக்கப்படவேண்டும்” என்றார்.

"சங்கத்தின் மதச்சார்பற்ற தன்மையை நிரூபிக்கும் பொருட்டுக் கட்டாயம் அல்அமீன் அழைக்கப்படுவார்” என உறுதி கூறப்பட்டது. ஜைனுத்தீன் பாய் திருப்தியடைந்தார்.

உடனே சங்கத்தின் நிதி நிலைமைகளுக்குப் பொறுப்பாளரான பொருளாளர், மெக்ஸிகோ, சிலி, மஸ்காட் இந்த மூன்று இடங்களிலும் இருந்து விமானத்தில் வந்து போகவும் சென்னையில் தங்கவும் ஆக எல்லாம் சேர்த்து ஒரு லட்ச ரூபாய்க்குக் குறையாமல் ஆகும் என்பதைத் தெரிவித்தார். அவர் குரலில் கவலை தோய்ந்திருந்தது.

“புத்த மதத்தை நாம் புறக்கணித்ததாக ஆகிவிடக் கூடாது. தாய்லாந்திலிருந்து குணசீல தர்மதேரோ என்ற பெளத்தக் கவிஞரை எப்படியும் அழைத்தாக வேண்டும்” என்றார் செல்வாக்குள்ள மற்றொரு கமிட்டி உறுப்பினர்.

அவருடைய விரோதமோ மனஸ்தாபமோ கூடாதென்பதற்காக அதை யாரும் எதிர்க்கத் துணியவில்லை.

“பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்! வசூல் செய்து கொள்ளலாம். மத்திய மாநில அரசாங்கங்களிடம் மான்யம் வாங்கிக் கொள்ளலாம். செருப்புத் தைக்கும் அடித்தளத்து மக்கள் கவிஞரைப்பற்றிய செமினார் என்பதால் மான்யத்தை மறுக்கும் துணிவு எந்த அரசுக்கும் வராது” என்றார் அரசியல் நெளிவு சுளிவு தெரிந்த ஒர் அங்கத்தினர். ஆகவே செலவைப் பற்றிய கவலை தற்காலிகமாக நீங்கியது.

என்ன செலவானாலும் கருத்தரங்கை ஒர் இண்டர்நேஷனல் செமினாராக மூன்று நாள் நடத்தியே தீருவது என்று முடிவு செய்யப்பட்டது. வருகிற விருந்தினர்களுக்கும் சர்வதேசக் கருத்தரங்கு என்கிற நிலைமைக்கும் ஏற்ப ஒர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் செமினார் நடத்தப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.