பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இரண்டாம் தொகுதி ஒரு சர்வதேசக் கருத்தரங்கு 1187

குசேலதேவ நாயனாரின் பாடல்கள் பாமர மக்களுக்கும் புரிகிற எளிய தமிழில் இருப்பதால் சர்வதேசக் கருத்தரங்கை எந்த மீடியத்தில் எந்த மொழியின் மூலம் நடத்துவது என்ற சர்ச்சை எழுந்தது.

“அவர் தமிழில் தான் பாடியிருக்கிறார். அதுவும் தோல் பதனிடுதல், செருப்புத் தைத்தல் போன்ற தொழிகளில் ஈடுபட்டிருந்த பாமர மக்களின் பேச்சுத் தமிழ் மொழியில் சித்தர் பாடல்களுக்கு இணையாக எழுதியிருக்கிறார். ஆகவே கருத்தரங்கைத் தமிழில் தான் நடத்தவேண்டும். பாடியவருக்குத் தெரியாத மொழியில் - பாடல்கள் பாடப்படாத அந்நிய மொழியில் கருத்தரங்கு நடத்தப்பட வேண்டாம்” என்றார், அந்த யோசனையை முதலில் தெரிவித்த தலித் இயக்கத்தைச் சேர்ந்தவர்.அவர் குரலில் கண்டிப்பிருந்தது.

“மெக்ஸிகோவைச் சேர்ந்த ஸாவ்லோ காப்டாவுக்கும், சிலி நாட்டைச் சேர்ந்த எபில்வியா பிளம்பருக்கும், மஸ்கட்டைச் சேர்ந்த அல்அமீனுக்கும் தாய்லாந்தைச் சேர்ந்த குணசீல தர்மதேரோவுக்கும் தமிழ் தெரியாதே? என்ன செய்யலாம்” என்று உடனே கேட்டார் மற்றோர் உறுப்பினர்.

“வரப்போகிற விருந்தினர்கள் நாலு பேருக்குத் தமிழ் தெரியாது என்பதற்காகக் கலந்து கொள்ளப் போகிற நானூறு பேருக்கு நன்றாகத் தெரிந்த தமிழை ஏன் புறக்கணிக்க வேண்டும்? உண்மையிலேயே அந்த நாலு அந்நியர்களுக்கும் நன்றாகத் தெரிந்த மொழிகளில் நடத்த வேண்டுமானால் ஸ்பானிஷ், லத்தீன், அராபி, பாலி போன்ற மொழிகளில்தான் நடத்தியாக வேண்டும். ஏனெனில் அவர்களுக்கும் ஆங்கிலம் அந்நிய மொழிதான்.”

“உங்கள் வாதம் சரி என்றே வைத்துக் கொண்டாலும் நம் குசேலதேவ நாயனாரைப் பற்றி நாலு பேர் ஆங்கிலத்தில் கட்டுரை படிப்பதும், நானூறு பேர் அவை பற்றி விவாதிப்பதும் பெருமைதானே? அதை ஏன் தடுக்கிறீர்கள்?’ என்று சமூக இலக்கிய சேவா சங்கத்தின் செயலாளர் கேட்டபோது தலித்காரர் வழிக்கு வந்தார். ஆங்கிலத்திலேயே நடந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்.

“பாமர மக்களின் பிரதிநிதியான எங்கள் ஏழைக் கவிஞரை உலகளாவிய ஆங்கில மொழியால் கெளரவிக்கப் போகிறீர்கள் என்றால் அதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. அந்தப் பாட்டாளி மக்கள் கவிஞனின் பரம்பரையில் எஞ்சியிருக்கும் கொள்ளுப்பேரன் மல்லையா இன்று பெரிய பாளையத்தருகே ஒரு குக்கிராமத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளியாகக் காலந்தள்ளி வருகிறான். அவனைக் கண்டிப்பாக இந்தக் கருத்தரங்கிற்கு அழைத்துக் கெளரவிக்க வேண்டும்."

“அதைப்பற்றிக் கவலையே வேண்டாம் அந்த மல்லையாவின் அட்ரஸை மட்டும் விவரமாக எங்களிடம் எழுதிக் கொடுத்து விடுங்கள். அவருக்கு விசேஷ அழைப்பு அனுப்பிக் கெளரவிப்பது சமூக இலக்கிய சேவா சங்கத்தின் முதல் கடமையாக இருக்கும்.”