பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1188: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தலித்காரர் மல்லையாவின் முழு விலாசத்தையும் எழுதிச் சங்கக் காரியதரிசியிடம் கொடுத்தார். காரியதரிசி கோயில் அர்ச்சகர் ஒருவரிடமிருந்து பிரசாதம் வாங்குவது போல அத்தனை பயபக்தியோடும் மரியாதையோடும் அதை வாங்கிக் கொண்டார்.

குசேலதேவ நாயனார் தத்துவப் பாடல்கள் என்று 1886ல் அச்சான ஒரு பழைய நைந்த புத்தகத்தை கன்னிமரா நூலகத்திலிருந்து தேடிக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அந்தப் புத்தகம் தொட்டாலே உதிர்ந்து விடும் நிலைமையிலிருந்தது. அந்தப் புத்தகமே நூறாண்டுகளுக்கு முன் அந்தக் கவிஞரின் இனத்தாருடைய நிதியுதவியால்தான் பிரசுரிக்கப்பட்டு முதற் பதிப்பாக வெளியாகியிருந்தது. ஆறணா விலைக்கு 800 பக்கங்களுக்கு மேல் பெரிய புத்தகம். இன்று வெளியிட்டால் 60 ரூபாய்க்கு மேல் அடக்கவிலையே ஆகும். ஆயிரம் பிரதி அச்சிட அறுபதாயிரம் ரூபாய் ஆகலாம். அதனால் சமூக இலக்கிய சேவா சங்கம் புத்தகத்தை மறுபிரசுரம் செய்யும் வம்பிலேயே இறங்க விரும்பவில்லை. அந்த ஒரு பிரதியை வைத்தே விழாவைச் சமாளித்துவிட விரும்பியது.

மிருகங்கள் செத்த பிறகும் தம் தோல்களை மனிதருக்குச் செருப்பு முதலிய பண்டங்களாய் அளித்துப் பயன்படும்; மனிதன் அதற்குக்கூடப் பயன்படமாட்டானே' என்ற அர்த்தத்தில் குசேலதேவ நாயனாரின் ஒரு பாட்டு இருந்தது.

"பாலின் நிறத்திலும் மேனி
பகட்டு நிறத்திலும் மனிதர்
நாலுவித மாய் வருணம் பெற்றீர்
நல்லவித மாய்த் தோலும் பெற்றீர்
வாலினை ஆட்டும் மிருகங்கள்
வகை வகையான விதங்களிலே
தோலினை அளித்துப் பயன்நல்கும்

துஷ்ட மனிதர் தோலும் பயனில்லை.”

என்று வருகிற குசேலதேவரின் அந்த ஒரு பாட்டையாவது தமிழில் அப்படியே நிகழ்ச்சி நிரலில் அச்சிட வேண்டும் என்றார் குசேலதேவ நாயனாரின் இனத்தைச் சேர்ந்த அந்த தலித் இயக்க ஆள்.

நிகழ்ச்சி நிரல் ஆங்கிலத்தில் அச்சிடப்பட இருப்பதால் நடுவே தமிழில் இந்தப் பாடலை இடைச்செருகல் போலப் போடுவது நன்றாக இராது என்று சொல்லிவிட்டார்கள். இதன் அர்த்தத்தை அல்லது கருத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நிகழ்ச்சி நிரலின் தலைப்பில் வெளியிட்டு விடுவதாகக் கூறிவிடவே அவருக்குத் திருப்தியாகப் போய்விட்டது.

ஏற்பாடுகள் சுறுசுறுப்பாக நடந்தன. செல்வாக்குள்ளவர்கள் முயற்சி செய்து மத்திய அரசிடம் இருந்து இரண்டு இலட்சரூபாயும் மாநில அரசிடம் இருந்து ஓர் இலட்ச ரூபாயும் மான்யமாக இந்த இண்டர்நேஷனல் செமினாருக்கு வாங்கி