பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / ஒரு சர்வதேசக் கருத்தரங்கு * 1189

விட்டார்கள். சிறப்பு மலர் விளம்பரங்கள் வசூல்கள் மூலமாக மேலும் ஒர் இலட்சம் தேறியது. எப்படியோ நாலு லட்சம் கையில் சேர்ந்துவிட்டது.

எல்லோருக்கும் அனுப்பப்பட்டது போல் பெரியபாளையத்திலிருந்த குசேலதேவ நாயனாரின் கொள்ளுப் பேரனான மல்லையாவிற்கும் ஒரு சைக்ளோஸ்டைல் செய்த ஆங்கிலக் கடிதம் அழைப்பாகப் போயிற்று. எழுதப் படிக்கத் தெரியாத மல்லையா அதைத் தன்னிடம் வாடிக்கையாகச் செருப்புத் தைக்கும் ஒரு புரொபஸரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி விவரம் தெரிந்து கொண்டான். மூன்று நாள் அங்கும் இங்குமாக வெயிலில் ஒடியாடிச் செருப்புத் தைத்த கூலியை ஒன்று சேர்த்து பஸ் பயணத்துக்கும் மற்றவற்றுக்கும் செலவழித்துச் சென்னை புறப்பட்டான்.

சர்வதேசக் கருத்தரங்கு ஆகையினால் எல்லா நாட்டாருக்கும் ஒத்து வருகிற, பொதுத் தலைப்பாக இருக்க வேண்டும் என்று 'ரேர் பொயடிக் வாய்ஸஸ் ஃப்ரம் அப்ரெஸ்ட் கிளாஸ்' என்று செமினாரின் தலைப்பைக் கொடுத்துவிட்டார்கள். முழு நிகழ்ச்சி நிரலிலும் எங்கேயோ ஓரிடத்தில் 'டு மார்க் த (ஹண்ட்ரட்த்) டெத் 100 செண்டினரி ஆஃப் கிரேட் பொயட் குசேலதேவா' என்று மட்டும் இருந்தது. மற்றபடி அந்தக் கவிஞரின் பெயர் வேறு எங்கும் இல்லை.

ஸாவ்லோ காப்டா, எபில்வியாபிளம்பர், அல்அமீன், குணசீலதர்மதேரோ ஆகியோருக்குப் போக வரப் பயன்படும் விமான ரிடர்ன் டிக்கெட்டுகள் எடுத்து அனுப்பியாயிற்று. சென்னையில் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட்டலில் அறைகள் ரிஸர்வ் செய்தாயிற்று. மத்திய கல்வி மந்திரி கருத்தரங்கைத் தொடங்கி வைக்கவும் மாநிலக் கல்வி மந்திரி வெலிடிக்டரி உரை நிகழ்த்தவும் ஸாவ்லோ காப்டாவின் கீ நோட் அட்ரசுடன் உரையைத் தொடங்கவும் ஏற்பாடாகிவிட்டது.

அபூர்வமாகத் தேடிக் கண்டுபிடித்த ஒரே ஒரு பிரதியாகிய குசேலதேவ நாயனாரின் பாடல்கள் அடங்கிய புத்தகப் பிரதியை மேடைமேல் ஒரு கண்ணாடிப் பேழையில் மாலையிட்டுப் பத்திரமாக அலங்கரித்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். கிடைத்தது, அந்த ஒரே ஒரு பிரதி புத்தகம்தான்.

கருத்தரங்கின் இடையே காலையிலும், மாலையிலும் பிஸ்கட்டுடன் இரு காப்பி பிரேக், பகலில் லஞ்ச், இரவு டின்னர், எல்லாம் அதே ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தடபுடலாக ஏற்பாடாகி இருந்தன.

கருத்தரங்கத் தொடக்கத்தில் 'பிரதமரின் எழுபத்தேழு அம்சத் திட்டத்தில் அறுபத்தேழாவது திட்டம் ஒடுக்கப்பட்டவர்களை விடுவித்து உயர்த்துவது ஆகும். இந்தக் கருத்தரங்கில் அதை விளக்க இருப்பதறிந்து நான் மட்டுமின்றிப் பிரதமரும் மகிழ்ச்சியடைவார்' என்று மத்திய கல்வி மந்திரி பேசியதை மறுநாள் காலை எல்லா செய்தித்தாள்களும் ஃபிளாஷ் செய்திருந்தன. குசேலதேவரின் பேரோ, அவர் ஒரு தமிழ்க் கவி என்பதோ அதில் வரவே இல்லை, 'இண்டர்நேஷனல் செமினார்.