பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1190 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஆர்கனைஸ்ட் பை ஸோஷியோ லிட்டரரி கல்சுரல் அஸோஸியேஷன்'- என்று மட்டுமே வந்திருந்தது.

 செமினார் மூன்று நாளும் தடபுடல்பட்டது. தொடக்கம் முதல் முடிவு வரை எல்லாமே ஆங்கிலத்தில்தான். மாநிலக் கல்வி மந்திரி கூடச் சிரமப்பட்டுத் தமிழ் உச்சரிப்போடு கூடிய ஆங்கிலத்தில் பேசினார். மெக்ஸிகோவிலிருந்து கீ நோட் அட்ரஸ் வழங்க வந்திருந்த கவிஞர் மட்டும் சில வரிகள் சம்பிரதாயமாக ஆங்கிலத்தில் பேசிவிட்டு, "ஐ டோண்ட் வாண்ட் டு ஸ்பீக் இன் எ லாங்வேஜ் விச் இஸ் நெய்தர் யுவர்ஸ் நார் மைன்” என்று திடீரென்று ஸ்பானிஷ் மொழியில் புகுந்துவிட்டார். அது எல்லாருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாயிருந்தது. மற்றவர்கள் எல்லாரும் ஆங்கிலத்திலேயே பேசினார்கள். கருத்தரங்கு பிரமாதமாக முடிந்தது. பத்திரிகைகள் பத்தி பத்தியாய்ப் புகழ்ந்து பிரசுரித்திருந்தன. விருந்தினர் நாடு திரும்பினர்.
 ஒரு வாரம் கழித்து 'டிஸ்பியூட்' என்ற பிரபல ஆங்கில வார இதழில் இந்தச் சர்வ தேசக் கருத்தரங்கு பற்றி ஒரு தலையங்கமும் சில முக்கிய பேட்டிகளும் வெளிவந்தன. எல்லாவற்றையும் பற்றி மற்றவர்கள் அணுகாத புதிய கோணத்தில் அணுகிப் பரபரப்பாக ஏதேனும் வெளியிடுவதில் மிகவும் புகழ்பெற்ற வார இதழ் இது. பிரச்னைகளை எதிர்மறையாக அணுகும் இதழ் டிஸ்பியூட்.
 முதல் பேட்டி குசேலதேவ நாயனாரின் கொள்ளுப் பேரன் மல்லையாவிடம் இருந்து பிரசுரமாகி இருந்தது. அதற்கு ஆசிரியரால் ஒரு முன் குறிப்பும் எழுதப்பட்டிருந்தது.

'பெரியபாளையத்திலிருந்து இந்த இண்டர்நேஷனல் செமினாருக்குக் கெளரவ விருந்தாளியாக அழைக்கப்பட்ட இவர் செமினார் நிகழ்ந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ளே அனுமதிக்கப்படாத காரணத்தால் ஊர் திரும்ப பஸ் சார்ஜ் - வழிச் செலவுக்குப்பணமும் ஏற்பாடும் இன்றித்தவித்துத் 'தம் கையே தமக்குதவி' என்ற முடிவுடன் மவுண்ட்ரோடு புகாரி அருகே பிளாட்பாரத்தில் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தபோது இப்பேட்டி எடுக்கப்பட்டது என்ற முன்னுரையுடன் பேட்டி ஆரம்பமாகி இருந்தது.

 தாம் இரண்டு மூன்று நாள் வெயிலில் தெருத் தெருவாக அலைந்து பெரியபாளையத்தில் செருப்புத் தைத்துச் சேர்த்த பணத்தைத் திரட்டிப் பஸ்ஸுக்குக் கொடுத்தது போக நாலு பேர் பார்க்கக் கெளரவமாக இருக்க வேண்டும் என்று செலவழித்துப் புதுச்சட்டை வேட்டி எடுத்துத் தயாராகிச் சென்னை வந்தது பற்றியும் எவ்வளவோ மன்றாடியும் கருத்தரங்கு நடந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தம்மை உள்ளே விட மறுத்துவிட்டதையும் மல்லையா பேட்டியில் கூறியிருந்தார்.'ஊர்திரும்ப பஸ் சார்ஜுக்காகவும் பிற செலவுகளுக்காகவும் நான் செருப்புத் தைச்சுப் பணம் தேட வேண்டியதாப் போச்சு' என்றும் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.
பேட்டியைத் தலித் இயக்கத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் கொடுத்திருந்தார்.