பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி/ ஒரு சர்வதேசக் கருத்தரங்கு * 1191

“இந்த இண்டர்நேஷனல் செமினாரினால் ஒரு பிரயோஜனமும் இல்லை. குசேலதேவர் எந்த மொழியில் எந்த மொழிக்காரர்களுக்காக எழுதினாரோ அந்த மொழியிலேயே அவரைப் பற்றி இன்னும் சரியாகத் தெரியாதபோது ஆங்கிலத்தில் இந்த செமினார் நடத்தியது எதற்காகவோ?
 செமினாரில் குசேலதேவரைப் பற்றி யாருமே எதுவும் சொல்லவில்லை. காரணம் அவரது பாடல்களின் கிடைத்த ஒரே ஒரு பிரதியும் மேடைமேல் பத்திரமாக ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டுவிட்டது. கடைசி வரை -செமினார் முடிகிற வரை அது வெளியே எடுக்கப்படவே இல்லை.
 இந்தச் சர்வதேசக் கருத்தரங்கை நடத்தி நாலு லட்சத்தை வீணடித்ததற்குப் பதில் குசேலதேவரின் கவிதைகளை மலிவுப் பதிப்பாகத் தமிழில் அச்சிட்டு வெளியிட்டு இருக்கலாம். தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, முதலிய மொழிகளில் மொழி பெயர்த்தும் வெளியிட்டிருக்கலாம். இப்போது நடந்த செமினார் வெறும் லஞ்ச், டின்னர், காபி பிரேக், டீ பிரேக் செமினார்தானே ஒழிய இதன் மூலம் எந்தப் பயனும் கிடையாது. இதனால் உள்ளளூராருக்கும் பயனில்லை. வெளிநாட்டாருக்கும் என்னவென்று புரியவில்லை. இங்குள்ள சில படித்த மேல்தட்டு மக்களின் 'இண்டலெக்சுவல் அரகன்ஸை' மட்டுமே நிரூபித்தது இந்தக் கருத்தங்கம்” என்று சாடியிருந்தது இந்தப் பேட்டி.
 மூன்றாவது பேட்டி ஒரு வாசகருடையது. “சுதந்திரத்திற்குப் பின் கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகச் செயல்திட்டங்களுக்குச் செலவழிப்பதை விடச் செமினார்களுக்கும் விவாதங்களுக்குமே அதிகமாகச் செலவழித்து நஷ்டப்படும் நாடுகளில் இந்தியா இன்று முன்னணியில் நிற்கிறது. ஒரு விஷயத்தைப் புரியவிடாமலும், தெரியவிடாமலும் செய்யப் போதுமான செமினார்கள் நாட்டில் அங்கங்கே ஏராளமாக நடக்கின்றன. இதுவும் அப்படித்தான் நடந்தது. இனியும் இத்தகைய செமினார்கள் வேறு மாதிரி இருக்கப் போவதில்லை. பேசுவதற்குச் செலவழிப்பதை விடச் செயல்படுவதற்கே நேரடியாகச் செலவழித்து விடலாம். யோசிப்பதற்குச் செலவழித்தே நஷ்டப்படும் நாட்டில் செயல்படுவதற்குப் பணமே மிச்சமிருக்காது” என்று கூறியிருந்தார் வாசகர்.
 நாலாவது பேட்டி மெக்ஸிகன் பொயட் 'ஸாவ்லோ காப்டாவிடமிருந்து.
 அந்தப் பேட்டியில் “தனக்கு யாரென்றே தெரியாத, தான் அறிந்திராத ஓர் இந்தியக் கவிஞர் பற்றிய செமினாருக்குத் தன்னைத் துணிந்து அழைத்ததன் மூலம் இந்திய நண்பர்கள் தனக்கு அளித்த அதிர்ச்சியிலிருந்து தான் இன்னும் மீளவில்லை” என்று சொல்லியிருந்தார் காப்டா."செமினாருக்குரிய கவிஞரும் நீங்களும் ஒரே ஜாதி - ஒரே இனம் என்பதற்காக உங்களைக் கூப்பிட்டதை நீங்கள் விரும்புகிறீர்களா?”
 “அந்த நினைப்பே குமட்டுகிறது எனக்கு. ஜாதி வித்தியாசங்களை விட மோசமானது அவற்றைக் 'காபிடலைஸ்' பண்ண முயல்வது. குசேலதேவரும் நானும் கவிஞர்கள் என்பதால் ஒரே இனம் என்ற நினைப்பு மட்டுமே எனக்குப்