பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

——————————————

இரண்டாம் தொகுதி/சிவானந்தம் ஒரு ‘ஜீனியஸ்’ 🞸 679

அடங்கிக் கிடக்கப்படாதுங்க. நல்ல நல்ல நாடகங்களை எல்லாம் அவர் எழுதணும். இன்னும் சொல்லப் போனால் சினிமா உலகத்துக்குக்கூட அந்த மாதிரி ‘ஜீனியஸ்’களின் சேவை தேவை” என்று அடுக்கினார் அந்தப் பெரும் நடிகர். கெளரவமான தொகைக்குக் கையெழுத்துப் போட்டு வசூலை அவர்தாம் ஆரம்பித்து வைக்க வேண்டுமென்று கேட்டபோது நடிகர் ‘ஸைலன்ஸ் பிக்சர்’ ஆகிவிட்டார்.

“நாங்க.திரைக்கலைஞர்கள் எல்லாம் சேர்ந்து தனியா ஒரு பெருந்தொகை திரட்டி அன்னாருக்கு வழங்கக் கருதியிருக்கிறோம். இந்த நோட்டு இருக்கட்டும்; இதிலே மத்தவங்க மூலமா வசூலாகிற தொகைக்கு முயற்சி செய்யுங்க. திரையுலகத்தைப் பொறுத்த மட்டில் நாங்க எல்லாருமாகச் சேர்ந்து ஏதாச்சும் செய்யிறோம்.” என்று சொல்லி மிகவும் நம்பிக்கையோடு கைகூப்பி விடை கொடுப்பதுபோல் கையை விரித்துவிட்டார் அந்த நடிகர். மூன்று நான்கு பேரிடம் படியேறி இறங்கிய பிறகு இவர்களுக்கு அலுத்துப் போய்விட்டது. சிவானந்தம் அவர்களிடம் இவ்வளவு திறமைகள் இருந்தும் எதற்காக ஒவ்வொருவரும் இப்படிச் சிரித்தபடியே அவருடைய மணிவிழாவைத் தட்டிக் கழிக்கிறார்கள் என்று புரியாமல் மருண்டார்கள் அந்த இளைஞர்கள். அன்றைய வசூல் முயற்சி அவ்வளவில் போதும் என்ற அந்தரங்கமான சலிப்போடு நண்பர்கள் ஒரு சிற்றுண்டி விடுதிக்குள் நுழைந்தபோது மிகவும் களைத்துப் பசித்திருந்தனர். காலியாயிருந்த ஒரு மேஜையைச் சுற்றிக் கிடந்த நாற்காலிகளில் உட்கார்ந்து சிவானந்தத்தின் துரதிர்ஷ்டத்தையும், வறுமையையும் பற்றி அவர்கள் பேசிக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். ‘அவர்களுக்கு என்ன சாப்பிடுவதற்கு வேண்டும்?’ என்று கேட்பதற்கு வந்த ஒட்டல் பையன் அவர்கள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுத் தயங்கி நின்றான். கால்மணி நேரம் கழித்துதான் அவர்கள் இட்லி, வடை, பாத் என்று அவரவர்களுடைய வயிற்றுப் பசிக்குத் தேவையான பண்டங்களை ஒட்டல் பையனிடம் சொல்லி அனுப்பினார்கள். பண்டங்கள் ருசிக்கவில்லை. ஆர்வத்தோடு புறப்பட்டு முயன்ற காரியம் ஆரம்பத்திலேயே சுறுசுறுப்பில்லாமல் துவண்டு போயிற்றே என்ற மனவேதனையில் எல்லாமே கசந்தன. “பணமும் செளகரியங்கள் உள்ளவர்களைத் தேடி வந்துதான் குவியும் போலிருக்கு. அண்ணா சிவானந்தத்தைப் போன்றவர்களுக்காக நாம் முயன்று தேடி அலைந்தாலும் அவை விலகி விலகிப் போய் நம்மை விரட்டுகின்றன” என்று வேதனையோடு கூறினார் ஒர் இளைஞர்.

“துரதிர்ஷ்டமும் வறுமையுந்தான் நிஜமான ‘ஜீனியஸ்’களின் பக்க பலம் போலிருக்கிறது சார்” என்று வருத்தப்பட்டார் வேறு ஒர் இளைஞர்.

“நாம் இந்த முயற்சியில் இறங்கியிருக்கவே கூடாது. இதனால் சிவானந்தத்துக்கும் மனக்கஷ்டம். நாம் எவ்வளவோ சொல்லியும் அவர் ஒப்புக் கொள்ளாமல் மறுத்தார். கடைசியில் ‘என்னை அதிகமாக அவமானப்படுத்திட மாட்டிங்கன்னு நினைக்கிறேன்’ என்று கூறி இணங்கினார். இப்ப இருக்கிற நிலைமையைப் பார்த்தா. நமக்கே வேதனையாயிருக்கு. ‘மணிவிழா’ என்று... தம்பிடி மணியில்லாமே எதை நடத்தப்