பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : உண்மையின் நிழல்

1195

“மஞ்சுளாவை எக் ரணத்தைக் கொண்டும் அவன் கண்ணு மின்னாடிக் கூட்டிக்கிட்டுப் போயிடாதீங்க… வேலை கெடைக்காட்டிக்கூட பரவாயில்லே… நம்ம வீட்டுப் பொண்ணு மானம், மரியாதையோட இருக்கணும்.”

“போனாப் போறதுன்னு கடனை, ஒடனை வாங்கி... நூறு ரூபாய் கொடுத்துடலாம்... அதுக்கு மேலே என் நிலைமைக்கு ஏலாது.”

“உங்க நூறு ரூபா அவனுக்கு ஒரு வேளைச் சாராயத்துக்குக் கூடப் பத்தாது செல்லம்மா.”

“அப்பளம் வித்துப் பொழைப்பு நடத்தற நான் அதுக்கு மேலே எங்கே போறது?”

“எங்கே போவீங்களோ, என்ன பண்ணுவீங்களோ? அவங்க ரேட்டே ஆயிரத்துக்கு மேலேதான் தொடங்குது செல்லம்மா!”

செல்லம்மாளுக்குக் கொஞ்சம் சந்தேகமாகக் கூட இருந்தது. பரிமளம் நிலாவழகனைப் பற்றிக் கொஞ்சம் மிகைப்படுத்தியே பயமுறுத்திச் சொல்கிறாளோ என்று அபிப்பிராயப்பட்டாள் செல்லம்மாள். அதற்குக் காரணம் இருந்தது. பரிமளத்தின் அண்ணன்தான் நிலாவழகனை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றிருந்தான். அந்தத் தோல்விக்குப் பின் பரிமளம் அடிக்கடி நிலாவழகனைப் பற்றி இப்படித்தான் தாறுமாறாக ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள். சில நம்பும்படி இருக்கும். வேறு சில நம்பும்படியாக இராது. செல்லம்மாள் கேட்டுச் சிரித்துக் கொண்டே போவது வழக்கம். எதையும் முழுக்க நம்பி ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிவிடவும் முடியவில்லை.

நிலாவழகன் உழைத்துச் சிரமப்பட்டு முன்னுக்கு வந்தவன். நடுத்தெருவில் காய்கறி வண்டி, பழவண்டி தள்ளி, நடைபாதை வியாபாரியாக உழைத்து முன்னுக்கு வந்தவன். ஏழை, எளியவர்கள் மேல் இரக்கமுள்ளவன். ‘நானும் வீடு வீடாக அலைந்து அப்பளம் விற்கிற ஏழை’ - என்று எடுத்துச் சொன்னால், அவனுக்கு இரக்கம் ஏற்படாமல் போகாது என்று எங்கோ ஒரு மூலையில் செல்லம்மாளின் உள் மனத்தில் ஒரு கீற்று அளவு சிறிய நம்பிக்கை ஒளி மின்னிக் கொண்டிருந்தது.சின்ன ஒளிதான். ஆனால், அது இடையறாது மின்னி மின்னி மறைந்தது.

பரிமளம் சொல்லியது போல், நிலாவழகனின் கூட்டத்தினர் லஞ்சப் பேர்வழிகள் என்பதால், அவனையும் அப்படியே கணக்கிட முடிந்தது. அனுமானிக்கவும் ஏதுவாயிற்று.அந்தத் தலைமுறையில் அரசியலில் இருந்த பலர் அப்படித்தான் எதற்கும் துணிந்து ரேட்டுப் போட்டுப் பணம் கை நீட்டி வாங்கினார்கள். ஒழுக்கமின்றி, நாணயமின்றி-மானம், மரியாதை இன்றி நடந்து கொண்டார்கள். அதனால் யாரைப் பற்றி எப்படி அவதூறு சொன்னாலும், மக்கள் நம்பும்படிதான் இருந்தது.அவதூறு சொல்கிறவர்களும் தாராளமாகச் சொன்னார்கள். கேட்கிறவர்களும் தயங்காமல், பயப்படாமல், தாராளமாகக் கேட்டார்கள். எவ்வளவு பெரிதாகச் சொன்னாலும், நம்பும்படித்தான் இருந்தது. தன் மனத்தில் மின்மினியாக மினுக்கிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு நம்பிக்கை ஒளி தூண்டிவிடச் செல்லம்மாள் மறுநாளே நிலாவழகனின் வீட்டுச் சமையற்கார ஆச்சியைச் சந்தித்தாள். தன் கவலையை எடுத்துச் சொன்னாள்.