பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/574

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1196

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

ஆச்சி அனுதாபத்தோடும், ஆதரவோடும், செல்லம்மாள் சொன்னதைக் கேட்டாள். பின்பு குரலைத் தணித்துச் செல்லம்மாள் காதருகே அந்தரங்கமாகச் சொன்னாள் : “ஒரு சூட்சுமம் இருக்கு! அதைச் சொல்றேன், கேட்டுக்க. உங்காரியம் நடந்துடும்.”

“என்ன ஆச்சி?”

ஆச்சி அவளை ஜாடை காட்டித் தன்னைப் பின் தொடரும்படி சொல்லி விட்டு நிலாவழகனின் பங்களாவுக்குள் அழைத்துச் சென்றாள்.

பூஜையறை போல் தோன்றிய ஓர் அறையின் முகப்பில் அவளை நிறுத்தினாள். பூச்சரத்தால் அலங்கரித்திருந்த ஒரு மூதாட்டியின் படத்தைச் செல்லம்மாளுக்குக் காட்டினாள் ஆச்சி. செல்லம்மாள் பார்த்தாள். ஆச்சி அவளைக் கேட்டாள்.

“இவங்க யாரு தெரியுதில்லே?”

“காய்கறி மண்டிப் பக்கத்திலே, தெருமுனையிலே ஆப்பக்கடை வச்சிருந்தாங்க…”

“ஆமாம். நிலாவோட… ஆயா... இப்ப இல்லே… செத்திரிச்சு...” 

“நான் இவங்களையே நேரில் பார்த்திருக்கேன் ஆச்சி”

“நாளைக்கிக் காலையில உன் மகளையும் கூட்டிக்கிட்டு வா... நிலா குளிச்சு முடிச்சதும் ஆயா படத்துக்குப் பூப்போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வச்சுக் கும்புடும். அப்போ பார்த்துச் சந்திச்சு, உனக்கு அந்த ஆயாவைத் தெரியும்கிறதையும் சொல்லி, வந்த காரியத்தைக் காதிலே போட்டுடு. உடனே பலிக்கும் செல்லம்மா! அந்த நேரம் ராசியான நேரம்.”

“அப்போ அவரைப் பார்க்க விடுவாளா ஆச்சி?”

“நீ இங்கே வந்து எங்கூடச் சமையலறையிலே அப்பளம் சப்ளை பண்ண வந்தவ மாதிரி இரு !நான் கொண்டு போய் விடறேன். கவலை வேணாம். அதெல்லாம் சரியா நடக்கும்.”

“என்னமோ ஆயிரம், ரெண்டாயிரம்னு பயமுறுத்தறாளே ஆச்சி!”

“பயமுறுத்தல் என்ன? நிஜமாக்கூட இருக்கலாம். நிலா சுபாவத்திலே நல்லவன். ஏழை எளியவங்கன்னா இரங்கறவன். அவனைச் சுத்தி ஒரு கூடை செங்கல்லும் பிடாரி. பணம் புடுங்காம உள்ளே போயிப் பார்க்கவே விட மாட்டாங்க செல்லம்மா.”

ஆச்சி சொன்னபடியே செய்வதாக ஒப்புக் கொண்டு திரும்பினாள் செல்லம்மாள். அவளுக்கு நம்பிக்கை வந்திருந்தது.

நகரின் கூட்டுறவுப் பால் பண்ணை ஆபீஸில் ஒரு டைப்பிஸ்ட் வேலை காலியாயிருந்தது. அந்தப் பால் பண்ணைக்கு அவன்தான் சேர்மன். அவன் ஒரு வார்த்தை சொன்னால் செல்லம்மாளின் பெண் மஞ்சுளாவிற்கு அந்த வேலை உடனே கிடைத்து விடும்.