பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : உண்மையின் நிழல்

1197

ஆச்சி சொன்னபடி அதிகாலையில் எழுந்திருந்து, மஞ்சுளாவை வீட்டில் இருப்பதற்குள் நல்ல புடவை ஒன்றைக் கட்டிக் கொள்ளச் சொல்லி, உடனழைத்துக் கொண்டு அப்பளக் கட்டு சகிதம் நிலாவழகன் வீ ட்டுக்குச் சென்றாள் செல்லம்மாள். பின்புறம் தோட்டத்து வழியாகச் சமையலறைக்குள் நுழைந்து காத்திருந்தாள். சமையற்கார ஆச்சி, செல்லம்மாளுக்கும், அவள் மகளுக்கும் காபி கொடுத்து உபசரித்தாள்.

எம்.எல்.ஏ. நிலாவழகன் அதிகாலையில் எழுந்து காரியங்களைக் கவனிக்கிற பழக்கமுடையவனாக இருந்தான். செல்லம்மாள் உள்ளே நுழைகிற போதே “நிலா குளிச்சிக்கிட்டிருக்கு” என்றாள் ஆச்சி.

“காபி எல்லாம் எனக்கும், மத்தவங்களுக்கும்தான். நிலா கேழ்வரகுக் கூழ்தான் காலையில் குடிக்கும்” என்று ஆச்சி செல்லம்மாளுக்குக் காபி கொடுக்கும் போது சொன்னாள். “அசல் சைவச் சாப்பாடு - பீடி, சிகரெட் தொட்டுக்கூடப் பார்க்க மாட்டான். மதுப் பழக்கமோ, மது அருந்துகிறவர்களின் பழக்கமோ அறவே ஆகாது. கிடையாது. வெளியே விளம்பரம் செய்யாத பக்தியும், இளகிய மனமும் உண்டு” என்று நிலாவழகனைப் பற்றிச் சமையற்கார ஆச்சி மேலும் கூறிய தகவல்கள் பரிமளம் பரப்பியிருந்த உண்மைகளோடு மாறுபட்டவையாயிருந்தன. ஆனால், ஆச்சி கூறியதுதான் நிஜமாயிருக்கும் போலிருந்தது. குளித்த ஈர வேஷ்டியோடும், இடுப்பில் கட்டிய துண்டோடும்,நெற்றியில் விபூதி, குங்குமத்தோடும் முதலில் விநாயகர், முருகன் படத்துக்கும் பிறகு தாயின் படத்துக்கும் பூப்போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்துக் கும்பிட்டான் அவன். வெளியே அவனை ஒரு நாள், ஒரு விநாடி கூட இப்படி நெற்றியில் திருநீற்றுடன் செல்லம்மாள் பார்த்ததே இல்லை.

ஆச்சி இவர்களை அவன் முன் அழைத்துச் சென்றாள். அவன் தாயின் படத்தைக் கண்களை மூடித் தியானத்தோடு வணங்கி விட்டுத்த லை நிமிர்ந்து எதிரே பார்த்ததும், “இவங்க நம்ம வீட்டுக்கு அப்பளம் குடுக்கிறவங்க... உங்க ஆயாவைத் தெரியும்... தானே உழைச்சுக் கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வச்சிருக்காங்க... ஏதோ பால் பண்ணை ஆபீஸ்ல ஒரு டைப்பிஸ்ட் வேலை இருக்காம்... தம்பி ஒரு வார்த்தை சொன்னா அது கெடைச்சிடும்கிறாங்க” என்று சமையற்கார ஆச்சியே அறிமுகம் செய்து விட்டாள். செல்லம்மாளும், மஞ்சுளாவும் அவனைக் கைகூப்பி வணங்கினார்கள். அவன் கடுகடுக்கவில்லை, மாறாக முகமலர்ந்தான்.

“ஆயாவை உங்களுக்கு நல்லாத் தெரியுமா?”

“தெரியுங்க... நான் உழைச்சு முன்னுக்கு வரணும்னு மறைமுகமாகக் கத்துண்டதே அவங்களைப் பார்த்துத்தான். அவங்க காய்கறி மண்டி முக்குலே...”

அவன் இடைமறித்துக் குறுக்கிட்டான்.

“ஒரு நிமிஷம் இருங்கம்மா, லெட்டர் தரேன். பால் பண்ணை ஆபிஸ் மானேஜரைப் பார்த்து சேர்மன் குடுத்தார்னு குடுங்க... உடனே ஆர்டர் குடுத்துடுவாங்க”