பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1200

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


கொண்டான் கண்ணப்பன். பகலில் டிரைவர் வேலை காரணமாக இழக்க நேர்ந்த பெருமிதத்தை இரவில் கிடைத்த கைதட்டல்களும், பாராட்டுக்களும், புகழாரங்களும் மீட்டுக் கொடுத்தன. ஓரளவு காம்பன்ஸேட் செய்தன.

'ஸ்வஸ்திக் ஸ்டீல் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' - தொழிற்சாலை எண்ணுாருக்கும் திருவொற்றியூருக்கும் இடையே இருந்தது. அதன் உரிமையாளர் குப்புசாமிக்கு இராயப்பேட்டை பாலாஜி நகரில் வீடு, கண்ணப்பன் காலை எட்டு மணிக்கு வர வேண்டும், மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்குப் போய்விடலாம். ஐநூறு ரூபாய் சம்பளம், தினசரி பேட்டா பத்து ரூபாய். காலை எட்டு மணிக்கு முன்னாலோ மாலை ஐந்துமணிக்குப்பின்போ வேலை செய்யவேண்டியிருந்தால் இன்னொரு பத்து ரூபாய் அதிகம் கிடைக்கும். தொழில் ரீதியாகக் குப்புசாமிக்குப் பல வெளியூர் இரும்பு வியாபாரிகளும்,தொழிலதிபர்களும் பழக்கம்.அவர்கள் விருந்தினர்களாகச் சென்னை வரவும் போகவுமாக இருப்பார்கள். அப்போதெல்லாம் அவர்களை விமான நிலையத்திலோ, இரயில் நிலையத்திலோ சென்று அழைத்து வரவும், கொண்டு போய்விடவும் வேண்டியிருக்கும்.அவர்களில் சிலர் ஐந்து,பத்து அதிகமாகப் போனால் பதினைந்து, இருபது என்று இனாம் கொடுப்பார்கள். முதலில் இப்படி இனாம்களை வாங்கத் தயங்கவும், கூசவும் செய்தான் கண்ணப்பன். ஆனால், நாளாக நாளாக அந்தத் தயக்கமும், கூச்சமும் அவனிடமிருந்து கழன்று போயின. கோடிக்கணக்கில் வரவு செலவு செய்யும் அவர்களுக்கு இது ஒரு கொசுக்கடி மாதிரி. தான் வாங்காததால் அவர்களுக்கும் லாபமில்லை, தனக்கும் லாபமில்லை என்பது புரிந்தது. வாங்கிக் கொள்ளலானான். டிரைவர் என்ற முறையில் இப்படியும் அப்படியுமாகச் சராசரி மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தது கண்ணப்பனுக்கு ஸ்டீல் கம்பெனி டிரைவர் என்று நியமனமாகி இருந்ததால் வருஷத்துக்கு இரண்டு போனஸ் வேறு வந்தது. ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸ் - டிரைவர் என்று எம்பிராய்டரி செய்த மூன்று செட் யூனிஃபாரம் வேறு தந்தார்கள். ஊருக்குச் சுளையாக ஐநூறு ரூபாய் அனுப்ப முடிந்தது. அவனது செலவுகளுக்கும் தாராளமாக இருந்தது.

ஆனாலும் கண்ணப்பனுக்கு அந்த வேலையின் மேல் மனத்தாங்கல்களும், கோபங்களும், ஆற்றாமைகளும் இருந்தன. வேலையைப் பற்றி வெளிப்படையாகத் தன்னை 'டிரைவர் என்று சொல்லிக் கொள்ளத் தயங்கினான் அவன்.

ஒவ்வொரு நாளும் காலையில் தினசரி முதல் வேலை, முதலாளியின் இரண்டாவது மகள் பிரியதர்சினி என்ற பிரியாவைக் கல்லூரியில் கொண்டு போய்விட வேண்டும். மரியாதை பிரச்சனை அங்கேதான் ஆரம்பமாகியது. சொன்னால் எங்கே வேலைக்குச் சேர்த்துக் கொள்ளமாட்டார்களோ என்று புலவர் படிப்பு, பட்டிமன்றம், கவியரங்கம் இவற்றை எல்லாம் அவர்களிடம் சொல்லவில்லை அவன். சொல்லாததால் எல்லா டிரைவரையும் போல அவனையும் ஒரு டிரைவராகவே நடத்தினார்கள் அவர்கள்.

"டிரைவர் காரை எடு காலேஜூக்கு நேரமாச்சு” - என்று அவன் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் முதல் குரலாகப் பிரியாவின் குரல்தான் அவனுக்குக் கட்டளை இட்டது. 'டிரைவர்' என்ற அதட்டலான அதிகார தோரணையிலான அந்த இளம்