பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/579

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி தொண்டு நிலைமையைத் து எனத் தள்ளி

1201

 பெண் குரல் அவனுள் எரிச்சலூட்டியது. ஒர் உறுத்தலான தன்மான உணர்வு தூண்டிவிட உடனே, "என் பெயர் கண்ணப்பன் அம்மா” என்று மிகவும் சாதுரியமாகத் தன்னை டிரைவர் என அவள் விளிப்பது தனக்கு விருப்பமில்லாததைப் புலப்படுத்தியும் பார்த்தாயிற்று. அவள் அதை எல்லாம் புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. மறுபடியும் 'டிரைவர்' என்றுதான் கூப்பிட்டாள். சில வேளைகளில் அது, "ஏய்! டிரைவர்' என்று கூட மாறிற்று.

அங்கே வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ குப்புசாமியிடம், “பிரியாவைக் காலேஜிலே கொண்டு போய் விட்டு விட்டு வரேங்க” என்றும், “பிரியா அஞ்சுமணிக்கு யாரோ சிநேகிதி வீட்டுக்குப் போகக் கார் வேணும்னு சொல்லிச்சு” என்றும் இரண்டொரு முறை பேசியிருந்தான் கண்ணப்பன்.அடுத்தநாள் காலையில் அவன் வேலைக்கு வந்ததுமே, “நீ வந்ததும் ஐயா உடனே பார்க்கச் சொன்னாரு” என்று பங்களா வாட்ச்மேன் கண்ணப்பனிடம் கூறினான்.

அவன் உடனே முதலாளி குப்புசாமியைப் பார்க்க உள்ளே சென்றான்.அவர் முன் ஹாலில் ஊஞ்சலில் உட்கார்ந்து காலைத் தினசரியில் மூழ்கியிருந்தார். அருகே இருந்த சோபாவில் திருமதி. குப்புசாமி தமிழ்ப் பேப்பரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள்தான் அவன் உள்ளே நுழைந்ததை முதலில் பார்த்தாள். என்ன காரணத்தாலே அவனைப் பார்த்ததும் அவள் முகமே மேலும் கடுமையானாற் போல் இருந்தது. குப்புசாமி பேப்பர் படித்து முடிக்கிறவரை அவன் கால் கடுக்க நிற்க வேண்டியிருந்தது.

துணிந்து ஒரு தடவை “சார்.” என்று அவன் கூப்பிட்டும் அவர் பேப்பரிலிருந்து கவனத்தைக் கலைக்காமலே"கொஞ்சம் இரு.வரேன்” என்றார். இனி அவன் போகவும் முடியாது. உட்காரவும் கூடாது. நின்றே ஆக வேண்டும். நின்றான். எரிச்சலோடு நின்றான். கால் கடுக்க நின்றான்.

கால் மணி கழித்து அவர் பேப்பரை மடித்து வைத்துவிட்டு அவன் பக்கமாகத் திரும்பினார். "உன்னை வேண்டுமென்றுதான் காத்து நிற்கச் செய்தேன்” என்று கடுப்பைக் காட்டியது அவர் பார்வை.

"நீ என்னவோ உன் வீட்டு வேலைக்காரியைக் கூப்பிடற மாதிரிப் பிரியா வந்தா போனா'ன்னு பேர் சொல்லிப் பேசறியாம். பிரியா என் மகள். அதாவது உன் பாஸோடே பொண்ணு. இனிமே மரியாதையா லட்சணமா, சின்னம்மா காலேஜ் போகணும்','சின்னம்மாவுக்கு வண்டிவேனுமாம்'னெல்லாம் சொல்லணுமே ஒழியப் பேரைச் சொல்லி நீ பேசக்கூடாது, புரிஞ்சுக்கோ! உனக்கு வயசும் அனுபவமும் பத்தாது. இளம் பிராயம், இந்த வேலையிலே எல்லாம் மரியாதைதான் முக்கியம்ப்பா' என்றார் குப்புசாமி.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போய் நின்றான். அதிர்ச்சி யாகவுமிருந்தது.

"என்னப்பாது.? நான் கேட்கிறேன். பதில் பேசாமல் கல்லுளி மங்கன் மாதிரி நிற்கிறே?”

நா.பா. 11 - 37