பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1202 🞸 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

எந்தப் படிப்பறிவும் இல்லாத ஒரு சாதாரணக் கார் டிரைவராயிருந்தால், சரிங்க. இனிமே அப்படியே செய்யறேன்’ என்று அவனும் இசைந்திருப்பான். புலவருக்குப் படித்து ஒருமை, பன்மை, மரியாதை எல்லாம் தெரிந்தவனாக இருந்த காரணத்தால் அவர் கூறியதை அப்படியே ஏற்றுப் பணிந்துவிடாமல் கருத்து வேறுபடும் உரிமை தனக்கு இருப்பதை உணர்ந்தான் கண்ணப்பன். மெல்ல விவாதிக்கத் தொடங்கினான்.

“பேர் சொல்றதினாலே மரியாதை இல்லைன்னு ஆயுடாதுங்க. இராமன், கிருஷ்ணன்னு கடவுளைக் கூடப் பேர் சொல்லிதான் வணங்கறோம். காந்தி,நேருன்னு பெரிய பெரிய தலைவருங்களைக் கூடப் பேர் சொல்லித்தான் குறிப்பிடறோம்.”

“இந்தாப்பா நிறுத்திக்க! உன் அதிகப்பிரசங்கம்லாம் வேணாம். பேர் சொல்லப்படாதுன்னாக் கேட்டுக்க விளக்கம்லாம் தேவையில்லை. பிடிக்காட்டி இப்பவே வேலையை விட்டு நின்னுக்க”

இதைக் கூறும்போது அவர் குரல் மிகவும் கறாராகவும் கடுமையாகவும் இருந்தது. அவன் பதில் சொல்லாமல் வேலையைக் கவனிக்கச் சென்றான். ஆனால், மனதுக்குள் அந்த வேலைக்குப் பதில் வேறு ஏதாவது வேலை தேடிக் கொண்டு சொல்லாமலே விட்டு விலகி விடுவது என்று தீர்மானம் செய்து கொண்டான் கண்ணப்பன். தன்னை அவர்கள் மரியாதை இன்றி ‘ஏய் டிரைவர்’ என்று கூப்பிடுவதைத் தான் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம். தான் அவர்களைப் பேர் சொல்லிக் கூப்பிடுவது மட்டும் மரியாதைக் குறைவாம். இது அவனது புலமைக்கும், சுயமரியாதைக்கும் ஒரு சவாலாக இருந்தது. பல பட்டிமன்றங்களில் அவன் ஆவேசமாகவும், உணர்ச்சி மயமாகவும் முழங்கும் ஒரு பாட்டு,

‘புல்லடிமைத் தொழில் பேணிப் பண்டு
போயின நாட்களுக்கு இனி மனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் 'து' என்று தள்ளி'

என்ற பாரதியார் பாட்டுத்தான். அவமானகரமான இந்தத் தொண்டு நிலை மையைத் ‘தூ’ என்று தள்ளிவிட வேண்டும் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று வேலைக்குப் போகாமல் அவர்களைக் கழுத்தறுத்துவிட வேண்டும் என்று எண்ணினான் அவன். ‘நாளையிலிருந்து வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டு நின்றால் அவர்கள் வேறு ஆள் ஏற்பாடு செய்து கொள்ள முடியும்.அப்படிமுடியாமல் டிரைவருக்கு நிறைய வேலைகள் உள்ள ஒரு தினத்தில் திடுதிப்பென்று போகாமல் இருந்துவிட நினைத்தான் கண்ணப்பன்.

அன்றைக்கு மறுநாளேகூட அப்படிநிறைய வேலைகள் இருந்தன. கண்ணப்பனின் அதிர்ஷ்டமோ அல்லது நல்ல வேளையோ அன்று மாலையே தற்செயலாக ஒரு வாய்ப்பு வந்தது. ஒரிடத்தில் வேலை இருப்பதாகக் கேள்விப்பட்டான் அவன். மாம்பலத்தில் அடகுக்கடை வைத்திருந்த ஒரு மார்வாரியிடம் டிரைவர் வேலை இருப்பதாகத் தெரிய வந்து விசாரிக்கச் சென்றான். அவன் போனபோது கடையில் மார்வாரியின் மகன்தான் இருந்தான். பெரிய சேட் இல்லை.