பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—————

இரண்டாம் தொகுதி /தொண்டு நிலைமையைத் ‘தூ’ எனத் தள்ளி * 1203

"டிரைவர் நம்பள்கி வேணாம், நம்ப ஃபாதர் ஸிக் ஆசாமி. அவருக்குத்தான் வேணும். டெய்லி காலம்பரவும், சாயங்காலமும் பீச்ல நடக்கணும். அதனாலே பீச்சுக்கும் காரிலே போகனும், டாக்டர் வீட்டுக்கு வாரத்துல ஒரு தரமும், வெள்ளிக் கிழமை கோயிலுக்கும்போகணும். வேற வேலை கிடையாது” என்றான்மார்வாரியின் மகன். நிறைய நேரம் மிஞ்சும் போலிருந்தது. படிக்கலாம், எழுதலாம், பட்டிமன்றம், கவியரங்கங்களுக்குப் போகலாம். சம்பளத்தைப் பற்றி விசாரித்தபோது “ஐநூறு ரூபாய்க்கு மேல் ஒரு பைசாக்கூடத் தர முடியாது” என்றான் மார்வாரியின் மகன்.

"உனக்கு வேலையே இல்லை. காலம்பர ஃபாதரோட பீச் வாக்கிங்குக்காக ஒட்டிட்டுப் போனப்புறம் வீட்டில கொண்டாந்து வுட்டியானா மறுபடி நீ ஈவினிங் ஃபைவ் தர்ட்டிக்கி வந்தாப் போறும் மழை நாளுங்கள்ளே அதுகூட இருக்காது” என்றான் சேட்டின் பிள்ளை.

“மாதம் அறுநூறாவது இல்லாட்டி மெட்ராஸ்ல எப்பிடிக் காலந்தள்ள முடியும்? இப்ப நான் இருக்கிற எடத்துல கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேலே வருது” என்று வாதிட்டான் கண்ணப்பன்.

“கம்பெனிகளிலே எவ்வளவு வேணும்னாத் தரலாம்! நம்பளைப் போலப் பாக்கெட்டுல இருந்து குடுக்கிறவங்களுக்கு கட்டாதுப்பா!”

“ஐந்நூத்தி அம்பதாவது இல்லாட்டி எனக்குக் கட்டாது சேட்”

“எதுக்கும் நீ நம்ப ஃபாதரைப் போய்ப் பாரு. அவருக்குப் பிடிச்சா எனக்குச் சம்மதம்.”

“அவரை எங்க பார்க்கிறது?” பகவந்தம் குப்தா தெருவில் வீட்டு விலாசத்தை எழுதிக் கொடுத்தான் சேட்

கண்ணப்பன் அந்த விலாசத்தை வாங்கிக் கொண்டு போய்ப் பார்த்தான். பெரிய சேட்டுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். நோயாளியாகத் தோன்றினார்.

“எங்கிட்ட வேலை கொறைவு, அம்பது ரூப்யாகூடக் குடுக்கிறது. பெரிய விஷயம் இல்லே. நம்பள்கி சம்மதம். ஆனா மனசுக்குப் பிடிச்ச மாதிரி நீ நடந்துக்கணும். பெட்ரோல் விற்கிற விலையில காரை வெளியே எடுக்க முடியிறதே இல்லே. கார் ஒட்டாதபோது மத்த வேலைகளைச் செய்யனும்” என்றார் பெரிய சேட்.

எப்படியாவது ஸ்வஸ்திக் ஸ்டீல் அதிபர் குப்புசாமியையும் அவரது மகள் பிரியாவையும் பழி வாங்கிவிட்டால் போதும் என்றிருந்தது அவனுக்கு ஒரு சம வயதுக்கும் குறைவான இளம் பெண்ணைச் செயற்கையான மரியாதையுடன் ‘சின்னம்மா’ என்றழைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. மறுநாள் காலை ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸின் விருந்தினராகப் பெங்களுர் ஃப்ளைட்டில் வர இருக்கிற ஒரு வியாபாரியைக் காலை ஏழரை மணிக்கே மீனம்பாக்கம் போய் அழைத்து வர வேண்டும். அவன் மறுநாள் போகவே போவதில்லை. திண்டாடட்டும். அப்பொழுது தான் புத்தி வரும் அவர்களுக்கு