பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

————

இரண்டாம் தொகுதி/தொண்டு நிலைமையைத் து எனத் தள்ளி * 1205

என்று பாரதி பாட்டை மேற்கோள் கூறுகையில் 'தூ' என்னும் சமயத்தில் மேடைக்கருகே உணர்ச்சிவசப்பட்டுக்காறித்துப்பியே விட்டான். ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸ் அதிபரை நினைத்துத்தான் காறித் துப்பினான். கூட்டம் கரகோஷம் செய்து ஆர்ப்பரித்தது. விவாத முடிவில் அவன் கட்சி வெற்றியும் பெற்றது. அவன் தமிழ்ப் புலவர் என்பதாலோ, பட்டிமன்றம் பேசப்போகிறான் என்பதாலோ சேட் ஒரு சிறிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதெல்லாம் அவனுக்குப் பிடித்திருந்தது.

புது இடத்தில் வேலையே இல்லை. போன ஒரு வாரத்திற்கப்புறம் ஒருநாள் சேட் அவனைக் கூப்பிட்டு, “என்னை உன் அப்பா மாதிரி நினைத்துக் கொள். தப்பாக நினைக்காதே! எனக்கு வாத சரீரம். ஒரு வருஷம் இந்த எண்ணெயை அழுத்தித் தேய்த்து மாலீஷ் போட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும் என்று கோட்டக்கல் வைத்தியர் கூறியிருக்கிறார். நீ தான் சிரமம் பார்க்காமல் சூடு பறக்க அழுத்தித் தேய்த்துவிடவேண்டும்” என்று ஒரு பாட்டில் ‘வாத வேங்கைத்’ தைலத்தை அவனிடம் நீட்டிவிட்டு உடம்பில் துண்டுடன் முன் குறுணி அரிசிப் பிள்ளையார் மாதிரி மணைப்பலகையைப் போட்டு உட்கார்ந்துவிட்டார்.அவர் என்ன சொல்கிறார் எனப் புரிந்ததும் அவனுக்கு அதிர்ச்சி. கோபத்தோடு கண்ணப்பன் தயங்கினான். மாட்டேனென்று மறுத்து விடலாமா என எண்ணினான். இந்த வேலையையும் விட்டுவிட்டால் சோற்றுக்குத் திண்டாட வேண்டுமே என்று பயமாகவும் இருந்தது. சொல்லாமல் கொள்ளாமல் திடுதிப்பென்று நின்று விட்டதால் பழைய ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸிலும் இனி முகத்தைக் காட்ட முடியாது. வேறு வழியின்றித் தொந்திக் கணபதியாகத் திறந்த மேனியோடு உட்கார்ந்துவிட்ட சேட்டுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தான்.

அந்த வயதிலும் மேட்லி ரோட்டில் சேட் ஒரு சின்ன வீடு வைத்திருந்தார். எப்போதாவது சேட்டோடு அங்கே போனால் அவள் ஹோட்டலுக்குக் காபி, டிபன் வாங்கி வா, பட்டுப் புடவையை இஸ்திரி போட்டு வாங்கி வா என்று வேலை ஏவினாள். கஷ்டமாயிருந்தது. கர்மமே என்று தலையிலடித்துக் கொண்டு எல்லாம் செய்துத் தொலைக்க வேண்டியிருந்தது.

'கண்ணப்பா! நீ என் பிள்ளை மாதிரி' - என்று பிரியமாக அழைத்தே அவனைக் கொன்றார் சேட் ‘உன் பிள்ளைகூட இதெல்லாம் செய்யமாட்டான்’ - என்று மனசுக்குள் கறுவிக்கொள்வான் கண்ணப்பன். இதற்குப் பழைய ஸ்வஸ்திக் ஸ்டீல்லே தேவலை என்றுகூடத் தோன்றியது. அவர்கள் அவமானப்படுத்தாமல் கறாராகச் சம்பளம் கொடுத்தார்கள். சேட்டோ மரியாதையாகவும், பிரியமாகவும் வதைத்தான். பேசாமல் ஒரு வேலையும் வேண்டாமென்று ஊருக்கே திரும்பப் போய்விடலாம் என்றால் ஊரில் சோற்றுக்குத் திண்டாட வேண்டியிருக்கும். மாலை நேரப் பட்டி மன்றங்கள், கவியரங்குகள், கை தட்டல்கள் எதுவுமே ஊரில் கிடைக்காது. அதனால் ஊர் திரும்ப மனசு வரவில்லை. சென்னை அவனை விட மறுத்தது.