பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

812 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைத்தது. அழகுத் தென்றலான இளம் பிரியாவை உட்கார வைத்துக் காரில் காலேஜிக்குக் கொண்டு போய்விட முடிந்தது. புதுப்புது மனிதர்களைச் சந்திக்க முடிந்தது. பழக முடிந்தது. டிரைவர் என்கிற முறையில் நிறையச் சவாரிகள் இருந்தன. உற்சாகமாக வேலை இருந்தது. டல் அடிக்கவில்லை.

இங்கே சேட் வீட்டிலோ, சேட்டின் நீர்யானை போன்ற உருவத்தையும் அவனது வைப்பாட்டியின் குண்டுமூஞ்சியையும் வட்டி எண்ணி எண்ணியே தேய்ந்து போய் நறுங்கலான சின்ன சேட்டையும்தான் திரும்பத் திரும்பப் பார்க்க முடிந்தது. பெட்ரோல் விலை ஏற ஏறக் காரை வெளியில் எடுப்பதே குறைந்து போயிற்று. ‘வாத வேங்கை எண்ணெய் தேய்த்துப் பிடித்துவிட, கடைக்குப் போய் காய்கறி வாங்கிவர, சின்ன வீட்டுக்குப் பட்டுப் புடவை அயர்ன் பண்ணிவர என்று டிரைவர் வேலை தவிர வேறு வேலைகளையே கண்ணப்பன் செய்ய வேண்டியிருந்தது. எல்லாவற்றிலும் ஒரே திருப்தி அவனை யாரும் டிரைவர் என்றோ ‘ஏய் டிரைவர்’ என்றோ கூப்பிடுவதில்லை. கம்பெனி பேர் போட்டு டிரைவர் என எழுதிய காக்கி யூனிஃபாரம் அணியும்படி வற்புறுத்தவில்லை. ஜிப்பா வேஷ்டியோடு, டி ஷர்ட் பேண்டோடு எப்படி வேண்டுமானாலும் இஷ்டம் போல மைனராகச் சுற்ற முடிந்தது. சென்னைக்கு வந்த புதிதில் இருந்த அவ்வளவு முனை மழுங்காத ரோஷமும், சுயமரியாதையும் இப்போது அவனிடமும் இல்லை. அவனுக்குச் சென்னையும், சென்னைக்கு அவனும் பழக்கப்பட்டுப் போயிருந்தார்கள். எம்.ஏ. படிக்கிற இலட்சியமும் ஈடேறவில்லை. மாதத்தில் பத்து பட்டி மன்றமும், இருபது கவியரங்கங்களும் கிடைத்தன. பழைய ஆவேசமும் மட்டுப் பட்டுத் தேய்ந்து பாமர நகைச்சுவை அவன் பேச்சில் அதிகம் தலைக்காட்ட ஆரம்பித்திருந்தது. கூட்டங்கள் மூலம் கொஞ்சம் பணமும் வந்தது. பெரிய சேட் ஒரு வருஷத்திலேயே அவன் சம்பளத்தை ஐம்பது ரூபாய் கூட்டி அறுநூறு ரூபாயாக உயர்த்தியிருந்தார். பெட்ரோல் விலை ஏறவே காலை, மாலை இரண்டு வேளையும் வேங்கட நாராயணா ரோடு பார்க் ஒன்றிலேயே தமது வாக்கிங்கை முடித்துக் கொள்ளப் பழகியிருந்தார் சேட் எப்போதாவது டாக்டரிடம் மெடிகல் செக்அப், கோயில், குளம், மிண்ட் தெருவில் உறவினர் வீட்டுக் கல்யாணம் என்று போக மட்டும் காரை வெளியே எடுத்தார்.

கண்ணப்பன் சேட்டை உட்கார்த்தி வழக்கம் போல் எண்ணெய் தேய்த்து விட்டான். சின்ன வீட்டுக்குப் பட்டுப் புடவை அயர்ன் பண்ணிக் கொண்டு வந்து தந்தான். ரங்கநாதன் தெருவுக்குப் போய் சேட் வீட்டுக்குப் புதினா, பச்சைக் காய்கறி எல்லாம் வாங்கி வந்தான். மாலை வேளைகளில் பட்டிமன்றம் பேசினான். கைதட்டல் வாங்கினான். கொஞ்சம் பணமும் பண்ணினான்.

ஒருசமயம் தற்செயலாகத் தெருவில் சந்தித்த ஒரு ரசிகர், “உங்க பேச்சிலேயே எனக்கு ரொம்பப் பிடிக்கிற இடம் உணர்ச்சி கொந்தளிக்கும் சுதந்திர ஆவேசத்தோடு குரலை உச்சஸ்தாயியில் கொண்டு போய்,