பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இங்கிதம் * 1209

எம்டி அதுதான் காரணம் என்றார்கள். அவர் மனைவியை இழந்து தனிக்கட்டை ஆனதிலிருந்தே இப்படித்தான் முசுடாகி விட்டார் என்றார்கள். இரண்டாந்தாரம் கட்டிக் கொண்டால் குணமாகி விடும் என்று யோசனையும் சொன்னார்கள். ‘இண்டராவர்ட்’ என்று வேறு சிலர் குறை கூறினார்கள்.

பெரியவர் - சேர்மன் ராஜசேகர முதலியார் எழுபது வயதிலும் சஃபாரியில் மாப்பிள்ளை போல ஆபீஸ் வந்தார். மாலையில் கிளப்புக்குப் போனார். பலர் மெச்சும்படி கச்சிதமாகக் காக்டெயில் மிக்ஸ் பண்ணினார். சிரிக்கச் சிரிக்கப்பேசினார். ரம்மி ஆடினார். டென்னிஸ் விளையாடினார், பெண்களிடம் கூச்சமில்லாமல் கலகல என்று பழகினார்.

சின்னவர் சந்திரசேகர் முகவாயில் தேன் கூடு கட்டின மாதிரிக் குறுந்தாடி, சிரிக்கவே மறந்து போய் விட்ட உதடுகள், சிரிக்கிறவர்களைச் சகித்துக் கொள்ளவே முடியாத கடுமை. ஆபீஸ் விட்டால் வீடு, வீட்டை விட்டால் லைப்ரரி. வேறு நண்பர்களோ, கிளப்புக்குப் போய் பழகுவதோ கிடையாது. வீட்டில் ஆள் உயரத்துக்குக் கம்பீரமாக வளர்ந்த இரண்டு ‘கிரேட் டேன்’ நாய்களைப் போஷித்தல் சந்திரசேகருக்குப் பிடித்த ஒரே பொழுது போக்கு மற்றபடி படு சீரியஸ், படு கடுமை, படு தனிமை.

‘சேகர் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரவு செலவு செய்தது. கன்ஸ்யூமர் அயிட்டங்கள் முதல் மருந்துகள் வரை பலவற்றைத் தயாரித் தார்கள். சிலவற்றுக்கு மாநில அளவில் ஏஜென்ஸி எடுத்திருந்தார்கள். எல்லாமாய்ச் சேர்ந்து லாபம் கொழித்தது. தொழில் வளர்ந்தது.

ஆறு மாடிகளில் கிரவுண்ட்ஃப்ளோரும், ஃபர்ஸ்ட்ஃப்ளோரும் தவிர மற்ற நான்கு மாடிகளிலும் அலுவலக ஊழியர்கள், கெமிக்கல் என்ஜினியர்கள், சேல்ஸ் மானேஜர்கள், பர்ச்சேஸ் ஆபீஸர், ப்ராஜெக்ட் ரிஸர்ச் இலாகா, ஃபைனான்ஸ் மானேஜர், எம்.டி, சேர்மன், முக மலர்ச்சியுள்ள அழகிய துறுதுறுப்பான இளம் பெண்களான ஸ்டெனோ கம் டைப்பிஸ்டுகள் என்று நிரம்பியிருந்தார்கள். ஆயிரம் பேருக்கு மேல் இருந்த ஊழியர்கள் யார் யார் என்ன போக்கு, எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் சேர்மனுக்கு அத்துபடி. ஒன்றையுமே கவனிக்காதவர் போல் கவனித்துப் பலரிடம் சகஜமாகப் பேசியே விஷயங்களைக் கிரகித்துக் கொள்வார் சேர்மன் ராஜசேகர முதலியார். நடுவாக வந்து போனாலும், ஆபீஸில் எந்த மூலையில் என்ன நடக்கிறது என்பது அத்துபடி அவருக்கு.

ஒரு நாள் லிஃப்டில் உடன் வந்த ரவீந்திரன் என்ற இளம் கெமிக்கல் என்ஜினியரிடம் “என்னப்பா! உன் ஃப்ராஜெக்ட் ரிப்போர்ட் எப்பக் கிடைக்கும்? கிடைச்சா உடனே ஒரு தேதி முடிவு பண்ணி நல்ல முகூர்த்தமாய்ப் பார்த்து எல்லாம் செய்துடலாம்” என்றார் பெரியவர். அவன் பவ்யமாகப் பதில் சொன்னான்.

“கெமிக்கல் போர்ஷன் ஆப் த ரிப்போர்ட் இஸ் வித் மீ சார், எக்ஸ்பெக்டிங் அதர் அயிட்டம்ஸ் ப்ரம் த ரெஸ்பெக்டிவ் டிபார்ட்மெண்ட்ஸ்.”