பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1210

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“அட நீ ஒண்ணு! நான் கேட்டது கம்பெனி ப்ராஜெக்ட்ரிப்போட் இல்லேப்பா. உனக்கும் ஸ்டெனோ மிஸ், மல்லிகாவுக்கும் காதல்னு கேள்விப்பட்டேனே. அதைப் பத்தித்தான் விசாரிச்சேன்! எப்ப முகூர்த்தம் வெச்சுக்கலாம்?”

இதைக் கேட்டு அவன் நாணினான்.முகம் சிவந்தது. “ஜமாச்சுடலாம்! சீக்கிரம் ஒரு முடிவு பண்ணு. மல்லிகா ரொம்ப ஸ்மார்ட் கேள். யூ.ஆர் லக்கி.”

இதே காதலைச் சின்னவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை அறிய அடுத்த நாளே மற்றொரு நிகழ்ச்சி நடந்தது.

அன்று ஏதோ ஒரு முக்கியமான லெட்டர் டிக்டேட் செய்து அவசரமாக டைப் ஆகி, டெல்லிக்கு அனுப்ப வேண்டியிருந்தது.

எம்.டி சந்திரசேகர் ஸ்டெனோ மல்லிகாவுக்காகக் காலிங்பெல்லை அமுக்கினார். பிரயோசனமில்லை. டெலிபோனை எடுத்தார். கீ போர்ட்டில் ஆளே இல்லை. கடிகாரத்தைப் பார்த்தார். பகல் ஒன்றே கால் மணி. அந்த ஆபீஸில் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை லஞ்ச் இண்டர்வெல். லெட்டரோ படு அவசரமான விஷயம். அவரே எழுந்து ஏ.சி. அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தால், ஸ்டெனோ மல்லிகா அவள் நாற்காலியில் இல்லை. கெமிக்கல் என்ஜினியர் ரவீந்திரனின் டேபிளில் எதிரெதிரே அமர்ந்து மல்லிகா சிரிப்பும் கும்மாளமுமாகப் பகல் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையே ஒரே காதல் கிளுகிளுப்பு. இந்த உலக நினைவே இல்லை அவர்களுக்கு.

ஏதோ ஒரு கோபத்தில் ஆத்திரமும், எரிச்சலுமாகத் தூண்டப்பட்டு நேரே அங்கே போய் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “இதென்ன? ஆபீஸா, சினிமாக் கொட்டகையா? வர வர இங்கே யாருக்கும் விவஸ்தையே கிடையாது. அரைமணி நேரமாக் காலிங்பெல்லை அமுக்கிக்கிட்டிருக்கிறேன். கேள்வி முறை இல்லையா? உன் டேபிளிலேயே உட்கார்ந்து சாப்பிட்டாக் குடியா முழுகிடும்?” என்று மல்லிகாவைப் பார்த்துக் கூப்பாடு போட்டார் எம்.டி.

“சாரி சார்! மன்னிக்கணும்” என்று வாரிச் சுருட்டிக் கொண்டு பதறிப் போய் எழுந்திருந்தாள் மல்லிகா. ரவீந்திரனும் எழுந்திருந்தான். ஆனால், எதுவும் பேசவில்லை. அவனுக்கு உள்ளூர ஒரே எரிச்சல்,

“உடனே அறைக்கு வந்து பார் ஒரு அவசர லெட்டர். டிக்டேட் பண்ணி டைப் ஆகிப் போகணும்!” மல்லிகாவை நோக்கி இரைந்து விட்டு உள்ளே திரும்பினார் எம்.டி.சந்திரசேகர். மல்லிகா பாதிச் சாப்பாட்டிலேயே எழுந்து எம்.டி. ரூமுக்கு ஒடுவதற்குப் பறந்தாள்.

அவர் தலை ஏ.சி. அறைக்குள் மறைந்ததும், ரவீந்திரன் அவளிடம் சொன்னான். “முதலில் பதறாமல், சாப்பிட்டு முடி. நீ போகக் கூடாது. கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத மனுஷன், லஞ்ச் டயத்துலே யார் எங்க உட்கார்ந்து சாப்பிட்டால், இவருக்கு என்ன? காட்டு மிராண்டி மாதிரி வந்து கத்திட்டுப் போறதைப் பாரு”