பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இங்கிதம் * 1211

“அந்த மனுஷன் சுபாவம் அவ்வளவுதான்! நாமதான் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகணும் ரவி! அஞ்சே நிமிஷத்திலே அந்த வேலையை முடிச்சுக் குடுத்துட்டு வந்துடறேன்.”

“மல்லிகா... நான் வெளையாட்டுக்குச் சொல்லலே. சீரியஸ்ஸாவே சொல்றேன். என் மேல் ஆணையா இப்ப நீ போகக் கூடாது. லஞ்ச் டயம் முடியற வரை நீ இங்கே பேசிண்டுதான் இருக்கணும்.”

ரவீந்திரனின் குரல் கடுமையாயிருந்தது. மல்லிகா கெஞ்சிப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக அவள் லஞ்ச் டயம் முடிகிற வரை எம்டி ரூமுக்குப் போகக் கூடாது என்று அவளைத் தடுத்தான்.

மணி ஒன்றே முக்கால். எம்டியின் அட்டெண்டர் வந்து அவளை மறுபடி எம்.டி. அவசரமாய்க் கூப்பிடுவதாகச் சொன்னான்.

அவள் கெஞ்சுகிற பாவனையில் ரவீந்திரன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். “ரெண்டு மணிக்கு வருவாங்கன்னு போய்ச் சொல்லுப்பா. இன்னும் கால் மணி நேரம்தானே இருக்கு…” என்று அட்டெண்டரிடம் ரவீந்திரனே அவளுக்காகப் பதில் சொல்லி அனுப்பினான்.

அதன் பிறகு யாரும் அவளைக் கூப்பிட வரவில்லை. சரியாக இரண்டு மணிக்கு ரவீந்திரனின் மேஜையிலிருந்து அவள் தன் இருக்கைக்குப் போய்ச் சுருக்கெழுத்துப் பேடும், பென்ஸிலுமாக எம்.டி. அறைக்குள் நுழைந்தாள்.

அங்கே வேறு ஒரு டைப்பிஸ்ட் எம்.டி.யின் டிக்டேஷனை சுருக்கெழுத்தில் நின்றபடியே குறித்துக் கொண்டிருந்தாள்.

அவளை உள்ளே பார்த்ததும் எம்.டி. சீறினார். “இப்போ உன்னை யாரும் இங்கே கூப்பிடலியே? போய் யாராவது சிரித்துப் பேசி அரட்டை அடிக்க ஆளு கிடைச்சாப்பேசிட்டிருக்கலாமே? ஆபீஸ் வேலையா முக்கியம்?”

இதைக் கேட்டு அவள் துணுக்குற்றாள். நெஞ்சம் வேகமாக அடித்துக் கொண்டது. பதற்றத்தோடு ஸீட்டுக்குத் திரும்பி வந்ததும், அழுது விடுவாள் போலிருந்தது.

சுற்றி இருந்த எல்லோரும் அவளையே பார்த்தனர். பதினைந்து நிமிஷத்தில் எம்.டி. ரூமிலிருந்து அட்டெண்டர் அவள் ஸீட்டுக்குத் தேடி வந்து ஒரு கவரை அவளிடம் கொடுத்துக் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு போனான். பிரித்தால், அது ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்,’க்ராஸ் நெக்லிஜன்ஸ், இன்ஸ்பார்டினேஷன், காரணமாக அவளை ஏன் வேலையிலிருந்து நீக்கக்கூடாது?’ என்று கேட்டிருந்தது. அவள் அதை எடுத்துக் கொண்டு கண்களில் நீர் தளும்ப ரவீந்திரனின் மேஜைக்குப் போனாள். அவனிடம் நடுங்கும் கைகளால் அதை நீட்டினாள்.

அதை வாங்கிப் படித்த அவன், அவளைப் பார்த்துப் புன்னகை பூத்தான், கேட்டான்:

“இவர்கள் என்ன நீக்குவது? நாமே விட்டுவிட்டால் போச்சு…”