பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1212

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

சொல்லிக் கொண்டே இருவருமே இந்த ஆபீஸிலிருந்து ராஜிநாமா செய்வதாகக் கூட்டுக் கடிதமாக ஒரு லெட்டர் டைப் செய்தான் ரவீந்திரன். முதலில் தன் கையெழுத்தைப் போட்டுவிட்டு அவளிடம் நீட்டினான்.

அதை அவள் படித்துப் பார்த்து விட்டு, “சேர்மனுக்கு அட்ரஸ் பண்ணியிருக்கீங்களே? ரெஸிக்னேஷன் லெட்டர் எம்.டி.க்கு அல்லது பெர்ஸனல் மேனேஜருக்குன்னு அட்ரஸ் பண்ணணும்?” என்று கேட்டாள்.

“காரணத்தோடு வேணும்னுதான் சேர்மனுக்கு அட்ரஸ் பண்ணியிருக்கேன். நீ முதல்லே கையெழுத்தைப் போடு. சேர்மன் வெளியில் போறதுக்குள்ளே அவரையே பார்த்து நேரில் குடுத்துடணும்”

அவள் கையெழுத்தைப் போட்டாள். ரவீந்திரன் உடனே தன் மேஜையிலிருந்த ஃபோனை எடுத்து ஆப்பரேட்டரிடம் சேர்மனுக்குக் கனெக்‌ஷன் கேட்டான். கனெக்‌ஷன் கிடைத்தது.

“சார் குட்மார்னிங். நான் ரவி பேசறேன். நானும் மல்லிகாவும் உங்களை ஒரு நிமிஷம் நேர்ல பார்க்கணும்…”

“பேஷாப் பார்க்கலாம். உடனே வாங்க. நான் அன்னிக்குக் கேட்ட பிராஜக்ட் ரிப்போர்ட் தயாராயிரிச்சின்னு நினைக்கிறேன். எப்ப முகூர்த்தம்? என்னிக்கிக் கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க?”

உற்சாகமாகப் பேசினார் சேர்மன். மல்லிகாவையும் அழைத்துக் கொண்டு உடனே சேர்மனைப் பார்க்கச் சென்றான் ரவீந்திரன்.

அந்த அறைக்குள் நுழைந்ததுமே, அவனைப் பாசத்தோடு தோளில் தட்டிக் கொடுத்து எழுந்து வந்து வரவேற்று அமரச் சொன்னார் சேர்மன்.

“வாம்மா! நீயும் உட்காரு!” மல்லிகாவையும் குஷியாக வரவேற்றார். “எப்பக் கல்யாணம்?”

அவர்கள் இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் கூச்சத்தோடு பார்த்துக் கொண்டனர்.

ஒரு நிமிஷ இடைவெளிக்குப் பின்,”எங்களை மன்னிக்கணும். இதை உங்க கிட்ட நேரில் குடுத்துட்டுப் போலாம்னுதான் ரெண்டு பேரும் வந்தோம்” - என்று ராஜிநாமாக் கடிதம் இருந்த உறையை ரவி அவரிடம் நீட்டினான். வாங்கிப் பிரித்துப் படித்த அவர் கோபத்தோடு,

“வாட் நான்ஸென்ஸ்... என்னது இதெல்லாம்?”

“இல்லே! கெளரவமா விலகிக்கலாம்னு பார்க்கிறோம்! அதான் நாங்களே ரிஸிக்னேஷன் எழுதி எடுத்துட்டு வந்தோம்?”

“ரவீ! வாட் இஸ் ராங் வித் யூ மை பாய்! கமான் டெல் மீ த ரீஸன்…”

ரவீந்திரன், மல்லிகா இருவருமே தயங்கினர். மணியை அமுக்கி அட்டெண்டரை வரவழைத்து, மூணு கப் காபிக்கு ஆர்டர் செய்தார் சேர்மன்.