பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இங்கிதம்

1213

“தா பாரு, காபி பிரமாதமா இருக்கணும். புதுசாக் கல்யாணம் ஆன பொண்ணு, மாப்பிள்ளையை உபசாரம் பண்ற மாதிரி காபி… ஆமா...” என்று வழக்கம் போல அட்டகாசமாக ஆர்டர் செய்தார்.

“இவன் கிடக்கிறான். இப்படித்தான் கல்லுளி மங்கன் மாதிரிப் பேசாமல் இருப்பான். நீ சொல்லும்மா! என்ன காரணத்தாலே ரெண்டு பேரும் இங்கே வேலையை விட றீங்க?” என்று சேர்மன் மல்லிகாவைக் கேட்டார். அவள் தயங்கித் தயங்கித் தன்னிடம் அளிக்கப்பட்ட ஷோ காஸ் நோட்டீஸை எடுத்து நீட்டினாள்.

அவர் வாங்கிப் படித்தார்.”எதனால் இப்படி நடந்ததும்மா?”

அவள் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள். பாதியில் உணர்ச்சி வசப்பட்டுக் குரல் உடைந்து அழுகையாகிவிடுமோ என்ற நிலைக்கு அவள் வந்ததும், மீதத்தை அவன் தொடர்ந்து சொன்னான்.

சேர்மன் பொறுமையாகக் கேட்டார். காபி வந்தது. அவர்களைப் பருகச் சொல்லி உபசரித்தபடியே தாமும் பருகினார். சிறிதுநேர மெளனத்துக்குப்பின், “நீங்க சொல்றது நிஜமா இருந்தால் தப்பு எம்.டி.மேலேதான். லஞ்ச் இண்ட்டர்வெல்லே நீங்க ரெண்டு பேரும் சிரிச்சுப் பேசிட்டிருந்தா இவனுக்கென்ன வந்தது? இட் இஸ் நன் ஆஃப் ஹிஸ் பிஸினஸ்…” என்று உறுதியான குரலில் பதில் சொன்னார்.

தன் அருகே இருந்த ஃபோனை எடுத்து, “எம்.டி.க்குப் போடுப்பா” என்று ஆப்பரேட்டரை வேண்டினார் சேர்மன்.

லயனில் எம்.டி வந்திருக்க வேண்டும்.”சந்தர்! தமிழ்லே இங்கிதம்னு ஒரு வார்த்தை இருக்கே, அது உனக்குத் தெரியுமா?”

“- - - - -“

“நீ அவசியம் தெரிஞ்சுக்கணும்பா. ஒரு வேளை எது இங்கிதம்கிறதைத் தெரிஞ்சுக்கிற ஆசை உனக்கு இல்லைன்னாலும் எதெது இங்கிதக் குறைவுங்கிறதையாவது நீ அவசியமாகத் தெரிஞ்சுக்கிட்டாகணும்.”

“- - - - -“

“சிரிச்சுப் பேசற ரெண்டு பேரைப் பார்த்துப் பொறுக்க முடியாமே வயித்தெரிச்சல் படறதும், வயித்தெரிச்சல் பட்டுத் தவிக்கிற ரெண்டு பேரைப் பார்த்து சிரிக்கிறதும்தான் உலகத்திலேயே தலைசிறந்த இங்கிதக் குறைவான காரியங்கள்.”

“- - - - -“

“இதிலே முதல் ரக இங்கிதக் குறைவை உங்கிட்ட நான் அடிக்கடி பார்க்கிறேன். இன்னிக்குக் கூடமல்லிகா விஷயத்திலே அதே தப்பை நீ பண்ணியிருக்கே…”

“- - - - -“

“நோ...நோ... நான் ஒத்துக்க முடியாது. உன்னாலே ஒரு பிரமாதமான எதிர்காலமுள்ள இளம் கெமிக்கல் என்ஜினியரையும், படு ஸ்மார்ட்டான ஒரு ஸ்டெனோவையும், நான் இழக்க முடியாது. நீ ஒரு பத்து நிமிஷம் கழிச்சு இங்கே வந்து என்னைப் பாரு. நேரே பேசலாம்.”