பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/596

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1218 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

மறுபடி ஒரு துண்டுத்தாளில் 161 - என்று எழுதிக் காட்டினார். 1330 என்றும் குறித்துக் கொடுத்தார்.

அதற்கு அப்புறம் புறப்பட்டுப் போய் விட்டார். வீடியோவில் மீதிப் படத்தையும் பார்க்கப் போக வேண்டியிருந்தது அவருக்கு.

அங்கிருந்து அவரை அழைத்துச் செல்வதற்குச் செவ்வாய் மண்டலத் தரணி காவலர் இரசிகர் மன்றத் தலைவர் விசிறிவித்தகனும் சந்திர மண்டலத் தரணி காவலர் மன்றத் தலைவர் ஜெயவந்தனாவும் காத்திருந்து அழைத்துச் சென்றனர்.

பகல் சாப்பாட்டுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக அமைச்சர் படுஞாயிறு பாவளவனார் கூறினார். அந்த வேளைக்குள் முதல்வர் டாக்டர் தரணி காவலரின் ஜாடைகளையும், சமிக்ஞைகளையும் அர்த்தப்படுத்திக் கொண்டு பிரஸ் பிரீஃபிங்கிற்குத் தான் தயாராகிவிடலாம் என்பது அவருடைய உத்தேசமாயிருந்தது. முதலில் தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டால் அப்புறம் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லலாம் என்பதும் அவரது திட்டமாயிருந்தது இப்போது.

மாண்புமிகு டாக்டர் முதல்வர் தரணிகாவலர் செய்த ஜாடைகளையும், அனுப்பிய சமிக்ஞைகளையும், எழுதிக்காட்டிய குறிப்புக்களையும் கொண்டு பலவற்றைப் புரிந்து விளங்கிக் கொண்டு அமைச்சர் படுஞாயிறு பாவளவனார் பிற்பகலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

சாயங்கால ஹெட்லைனுக்கு ஏதாவது ‘ஹாட் நியூஸ்’ கிடைக்குமா என்றே காத்துக் கிடந்த பத்திரிகை நிருபர்கள் எல்லாருடைய ஏகோபித்த முதல் கேள்வியும் ஒரே தினுசாக இருந்தது.

"மந்திரிசபை மாற்றம் உண்டா”படுஞாயிறு இந்த முதல் கேள்வியிலேயே எரிச்சல் அடைந்தார். ஆனாலும் நிருபர்கள் விட்டுவிடவில்லை. அமைச்சரும் மசியவில்லை.

“உங்கள் கேள்விக்கு இறுதியில் வரலாம். தலைவர் - தரணிகாவலர் - சொன்ன முறைப்படி முதலில் எது, இரண்டாவது என்ன, மூன்றாவது என்ன என்று வரிசைப்படுத்தி வைத்துள்ளேன். அவற்றை நான் கூறியபடி குறித்துக்கொண்டு பின்பு உங்கள் கேள்விகளைக் கேட்டால் கடமையும் கண்ணியமும் கட்டுப்பாடும் காக்கப்படும் என நான் நம்ப முடியும்.”

“சரி” என்று நிருபர்கள் சம்மதித்துத் தொலைத்தார்கள். மாண்புமிகு படுஞாயிறு தொடங்கினார் :

“தரணி காவலர் மந்திரி சபைக் கூட்டம் நடக்கிற இடத்தில் நுழைந்ததுமே ஒரு சுண்டெலி குறுக்காக ஓடியதைக் கண்டு முகம் சுளித்தார்.

"விரைவில் அரசு சார்பில் உடனடி நடவடிக்கை எடுத்து, எலி ஒழிப்பு வாரியம்; பூனை வளர்ப்புவாரியம் ஆகிய இருபெரும் வாரியங்களைத்தலா நாலாயிரம் கோடி