பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1220

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

உப்பு விற்போர் சங்கத்தின் தலைவராகப் போடும் எண்ணம் மாண்புமிகு முதல்வருக்கு இருப்பதாகத் தெரிய வருகிறது.”

“நன்றியின் சின்னமாகக் கருதப்படும் நாய் வளர்ப்பு வாரியத்திற்குத் தலைவராகவே க.பொ.சி. அவர்களைக் கடமையாற்றச் செய்யலாமே?”

“தரணி காவலர் அவர்கள் விரும்புகிற பட்சத்தில இரு பெரும் பதவிகளையுமே அவர் கலம்பகச் செல்வருக்கு அளிக்கத் தயங்க மாட்டார் என்று சொல்லுவேன்.”

“உங்கள் கட்சி இளைஞர்கள் பலர் பதவிகள் இன்றிப் பரிதவித்திருக்கையில், 97 வயது க.பொ.சிக்குத் திரும்பத் திரும்பப் பதவிகளை அளிப்பது கட்சி மட்டத்தில் கசப்பை ஏற்படுத்தாதா? வெறுப்பை வளர்க்காதா?”

'கசப்பு ஒழிப்பு வாரியம் என்ற ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மாண்புமிகு முதல்வர் டாக்டர் தரணி காவலர் அதைச் சமாளிக்க முடியும் என்பதில் யாரும் ஐயப்பட இடமில்லை. ஐயப்பட்டால் அவன் நரகத்துக்குப் போவான் என நம்பும் பகுத்தறிவாளர்களிலே நான் முதலாமவனாக இருப்பேன்.”

“மந்திரி சபை மாற்றம் பற்றி…?”

“முதல்வர் டாக்டர் மாண்புமிகு தரணி காவலர் பரணி பாடும் தம் வலக்கரத்தைத் தூக்கி ஐந்து விரல்களையும் காட்டி இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மந்திரிசபை மாற்றம் எதுவும் இல்லை என்பதை அழுத்தமாகத் தெரிவித்தார்.”

“அது எப்படி? ஒருவேளை ஊழல் புரிந்த ஐந்து மந்திரிகளைக் கட்சியிலும், ஆட்சியிலுமிருந்து தூக்கி எறிவேன் என்ற அர்த்தத்தில் கூட அவர் ஐந்து விரல்களைக் காட்டியிருக்கலாம்” என்று இடைமறித்த ஒரு குறும்புக்கார நிருபர் ஆரம்பித்தார்.

“அதெல்லாம் இல்லை. இன்னும் ஐந்து நிமிஷம்தான் என்னால் இந்தக் கூட்டத்தில் இருக்க முடியும். அதன்பின் ‘வீடியோ’வில் ‘தேடிய குமரி’ படம் பார்க்கப் போக வேண்டும் என்ற அர்த்தத்திலும் கூறி இருக்க முடியும்” என்றார் எதிர்க்கட்சிப் பத்திரிகை நிருபர்.

இதைக் கேட்ட உடனே மாண்புமிகு படுஞாயிறுக்கு சினம் மூண்டு விட்டது.

“எம் தங்கத்தலைவன் - சங்கத் தமிழ் மகன் - சிங்கக் குருளைகளின் சீரிய மன்னன் - வீரிய வேந்தன் ஆரியப்படை கடந்தோன் எதைக் கூறினாலும், எப்படிக் கூறினாலும் அதை ஏற்க நான் சித்தமாய் இருப்பேன் என்பதையும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். பதவி நீக்கப்படுகிற ஐந்து பேரில் முதல் நபராக நானே இருந்தாலும், தலை வணங்கித் தாள் பணிந்து, அதனைக் கனிவோடு பாதங்களில் விழுந்து ஏற்பேன் என்பதைத் துணிவோடு உங்கள் முன்னே தெரிவித்துக் கொள்கிறேன்.”

அந்த நிருபரின் கேள்வியைத் தவறாகப் புரிந்து கொண்ட அமைச்சர் ‘ஊழல் மந்திரிகள் ஐவர்’ என்று சொன்னதுமே, அவர் தன்னைத்தான் குறிப்பிடுவதாக எரிச்சலடைந்து குரலை உயர்த்தினார். பதவி நீக்கம் என்றதுமே அமைச்சரின் குரல்