பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/600

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1222

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

படுக்கையைக் குறிக்காது) அமர்ந்த பின்பே 154 புதிய மாவட்டங்கள் உருவாகவும் வழி பிறந்தது.”

“புதிய மாவட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதில் கலம்பகச் செல்வர் நாமம் பரிசீலிக்கப்படுகிறதா?”

“மாண்புமிகு டாக்டர் முதல்வர் தரணி காவலர் கருத்துப்படி காலஞ்சென்ற பெரியோர் தவிர வாழும் பெரியோர் யாரையும் மாவட்டத்தின் பெயர் ஆக்குவதில்லை எனப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.”

“காலஞ்சென்ற என்ற தொடருக்கு வயது முதிர்ந்த என்பதாகவும் ஒரு பொருள் கொள்ள வழி இருக்கிறதாக அரசு வார்த்தை வார்ப்படப் பட்டறை இயக்க-இயக்குநர் டாக்டர் கவ்வை கஜராஜன் ஒரு சொற்பொழிவில் கூறியுள்ளபடி பார்த்தால் கலம்பகச் செல்வர் க.பொ.சி.யின் பெயரையும் மாவட்டத்துக்குச் சூட்ட இடம் உண்டு எனத் தெரிகிறதே...?”

“சொற்பொழிவில் சொல்வது எல்லாம் அதிகாரப்பூர்வ அரசு ஆணை ஆகிவிடாது.”

“மேற்படி வார்த்தை வார்ப்படப் பட்டறை இயக்க இயக்குநர் பட்டிமன்றம் – பாட்டி மன்றம் - கவியரங்கம் - கருத்தரங்கம் – வழக்காடு மன்றம் ஆகிய மேடை களிலேயே முழு நேரமும் கழிந்து விடுவதால் அரசு ஆணையாக எதை அறிவிக்கிறார், சொற்பொழிவாக எதைப் பேசுகிறார் என்பதை எல்லாம் பிரித்துப் பார்க்க முடியவில்லையே?”

“யார் எதைச் சொன்னாலும் ‘காலஞ் சென்ற’ என்ற தொடருக்குத் தரணி காவலர் மாண்புமிகு டாக்டர் மெளன விரதம் முடித்த பின் என்ன விளக்கம் சொல்கிறாரோ, அதுவே சரியானதாயிருக்கும் என்பதைப் பணிவுடன் கூறிக் கொள்ள விரும்பிச் சொல்லும் அதே வேளையில்…”

“சரிங்க! இந்தப் புதிய பல்கலைக் கழகங்கள் விஷயம்…?”

“தாய் மேல் ஆணையாகத் தமிழ் மேல் ஆணையாகத் திருக்குறளை நினைவூட்டும் வகையில் ஆயிரத்து முந்நூற்று முப்பது புதிய பல்கலைக் கழகங்களை நடப்பு ஆண்டில் புதிதாகத் தொடங்க இருக்கிறார் தரணி காவலர். இது மக்களுக்குப் பொங்கல் பரிசாக அமையும்.”

“என்னங்க இது? புதிய பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை புதிய மாவட்டங்களைத் துரக்கிச் சாப்பிட்டுடும் போலிருக்கே?”

“ஆம்! புதிய பல்கலைக்கழகங்கள் என்று நாங்கள் ஆரம்பித்ததுமே, தரணி காவலர் ஒண்ணே முக்கால் விரலை மடக்கிக் காட்டி, அதாவது ஆள்காட்டி விரலையும், சுண்டு விரலையும் - குறிப்பாக ஒண்ணே முக்கால் அடியில் பாட்டுப் பாடிய குறளில் உள்ளது போல் 1330 பல்கலைக் கழகங்கள் என்பதைப் புலப்படுத்தினார். தரணி காவலர்