பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : கேபினட் டெசிஷன்ஸ்

1223

மாண்புமிகு டாக்டரின் தமிழ்ப் புலமையைக் குறைத்து மதிப்பிடும் குள்ளநரிகள் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பாவது தங்கள் குறுமதியினைத் தவிர்த்திடுதல் நலம் பயக்கும் என வேண்டி விரும்பி மன்றாடி…”

“மானாவாரியாகப் பல்கலைக் கழகங்கள் உண்டாக்கப்படுவதன் நோக்கம்...?”

“புதிய மாவட்டங்கள், புதிய பல்கலைக் கழங்கள் அனைத்துமே வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும் நடுவண் அரசின்...”

“புதிய பல்கலைக் கழகங்களில் ஒன்றிற்காவது கலம்பகச் செல்வரின் பெயர் சூட்டப்படுமா?”

“ஆயிரத்து முந்நூற்று முப்பது பல்கலைக் கழகங்களுக்குப் பெயரிடுகையில், கொடுத்துச் சிவந்த எம் தலைவனின் பொற்கரம் - ஒரு பெயரை எப்படி எங்கு சூட்ட முடியும் - சூட்ட வேண்டும் என்பதை நன்கு அறியும்.”

“ஒரு ஜில்லாவுக்கு அஞ்சாறு யூனிவர்ஸிடி வீதம் போட்டாலும் மிச்சமிருக்கும் போலிருக்கே சார்!”

“அப்படி ஒரு பற்றாக்குறைப் பிரச்னை எழுமானால், தங்கத் தலைவர் தரணி காவலரின் அரசு அதை எப்படிச் சமாளிப்பது என்பதை அறிந்தே இருக்கிறது. மாவட்டங்களின் எண்ணிக்கையை விடப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கிறதே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையைப் போல் மாவட்டங்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காக உயர்த்த இந்த அரசு ஒரு சிறிதும் தயங்காது என்பதை இந்தச் சிக்கலான நேரத்தில் தன்மானத் தலைவர் சன்மானமாகத் தந்த துணிவின் பேரால் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.”

“பல்கலைக்கழகத்திற்குப் பெயராக சூட்டாவிடிலும், க.பொ.சி.யை ஒரு துணை வேந்தராகவாவது நியமிக்க அரசு முன் வருமா?”

“முட்டைக் கானல் மலையில் அரசு தொடங்க இருக்கும் ‘தள்ளாடும் முதியோர்களுக்கான தண்டமிழ்ப் பல்கலைக் கழக’த்திற்குக் கலம்பகச் செல்வரைத் துணைவேந்தராக நியமிக்கத் தரணி காவலர் அரசு யோசித்து வருவதை இங்கு நான் பணிவுடன் சொல்லிவிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

மந்திரியாகப் பிரஸ் ப்ரீஃபிங்கை முடித்து விடை கொடுக்க மாட்டார் என்பது போல் தோன்றவே, நிருபர்கள் தாங்களே ஒவ்வொருவராக மெல்ல மெல்லக் கழற்றிக் கொள்ளத் தலைப்பட்டார்கள்.

அன்றைய மாலைப் பத்திரிகைகளிலும், மறுநாள் காலைத் தினசரிகளிலும் மந்திரிசபை முடிவுகள் பற்றி ஒரே ‘பிளாஷ்’ மயம்.

- புதிதாக 1330 பல்கலைக்கழகங்கள்-161 புதிய மாவட்டங்கள் –