பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/605

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : சமர்ப்பணம்

1227

தங்கள் விருந்தினர் ஊர் சுற்றிப் பார்க்க ஒரு ஏ.சி. செய்த பென்ஸ் கார், அவருக்குப் பிடித்த சமையல் என்றும் ஏற்பாடு செய்து விடுவார்கள். தங்கள் விருந்தினரைப் பார்க்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் கெஸ்ட் ஹவுசுக்குத் தேடி வரும் கூட்டமும், அவர் மிட்டாபுரம் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பதாகப் பத்திரிகைகளில் வரும் ஒரு வரி அரை வரி நியூஸும், “மிட்டாபுரம், மிட்டாபுரம்தான் ஐயா! பாரி வள்ளல் மாதிரி யார் வந்தாலும் உபசரிக்கிறாங்க!” என்று ஜனங்கள் புகழும் பாமரப் புகழ்ச்சியுமே அவர்களுக்குப் போதுமானவை. வேறெதுவும் வேண்டாம்.

தங்களால் எந்தெந்த ஊர்களில் விருந்தினர்களை உபசரிக்க முடியுமோ, அந்தந்த ஊர்களில் இப்படி விருந்தினர்களை வேறு யாரும் போட்டி வள்ளல்கள் கொத்திக் கொண்டு போய் விடாமல் தடுத்துத் தங்களிடமே தங்க வைத்துக் கொள்வதிலும் மிட்டாபுரம் குடும்பத்தார் நிபுணத்துவமே பெற்றிருந்தார்கள். பழைய நாளில் ஜமீன்தாராக இருந்த அந்தக் குடும்பத்தின் முன்னோர், தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் தர்ம சத்திரங்களும், கட்டளைகளும் நடத்தியது போல், இப்போது கெஸ்ட் ஹவுசுகளை வைத்து உபசரித்து வந்தார்கள்.

அதற்காகக் கண்ட கண்ட குப்பன், சுப்பனை எல்லாம் உபசரித்து விட மாட்டார்கள். ஊர், உலகத்தில் பிரபலமானவர்களை மட்டுமே தேடி அழைத்து உபசரிப்பார்கள்.

கவர்ச்சி நடிகை கனககுமாரி ஊட்டியில் வெளிப்புறக் காட்சி படப்பிடிப்பிற்காகச் சென்றால் கூட மிட்டாபுரம் விருந்தினர் மாளிகை அவளை வரவேற்று உபசரிக்கும். கர்நாடக சங்கீத வித்வான் கானாம்ருத சக்ரவர்த்தி கந்தசாமி பாகவதர் வந்தாலும் மிட்டாபுரம் கெஸ்ட் ஹவுஸில் இதே உபசரிப்பைப் பெறலாம். பேதாபேதம் எதுவும் கிடையாது.

இதைக் கொண்டு மிட்டாபுரம் குடும்பத்தார் கனககுமாரியின் விசிறிகள் என்றோ, கானாம்ருத சக்கரவர்த்தியின் சங்கீத ரசிகர்கள் என்றோ நீங்கள் அவசரப்பட்டு அனுமானம் செய்து விட முடியாது. இரண்டிற்குமே அவர்களுக்கு நேரமில்லை. எந்த சிமெண்டிற்கு ஏஜென்சி எடுக்கலாம், எந்த இரும்பிற்கு டீலராகலாம், எந்தப் பெரிய ஊரில் இன்னும் சினிமா தியேட்டர் கட்ட இடமிருக்கிறது, எந்தப் புது இண்டஸ்ட்ரிக்கு லைசென்ஸ் பெறலாம் என்பன போன்றவற்றை யோசிக்கவே அவர்களுக்கு நேரமில்லை.

அவற்றைச் செய்வதற்கே ஐயாயிரம் - பத்தாயிரம் என்று சம்பளத்தை அள்ளிக் கொடுத்து நிபுணர்களை நியமித்திருந்தார்கள். அவர்கள் எப்போதோ கிரீஸ் போட்டு முதல் தரமான பால் பேரிங்குகளைப் பொருத்தி முடுக்கி விட்ட சக்கரங்கள் போல் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தனர். நேரடியாக அந்தக் குடும்பத்தார் விருந்துபசாரத்தில் இறங்காவிடினும், நாடு முழுவதும் அந்தக் குடும்பத்தாரிடம் பி.ஆர்.ஒக்களாகவும், லையஸான்களாகவும், ஹோஸ்டெஸ்களாகவும் (உபசரணை அழகிகள்) இருந்தவர்கள் அதை வெற்றிகரமாகச் செய்தனர். பேர் வாங்கிக் கொடுத்தனர்.