பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1228

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

‘மிட்டாபுரம்’ ஊழியர்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். தங்கள் விருந்தினராக வரும் ஒருவரை விமான நிலையத்தில் வரவேற்கிற பி.ஆர். ஓ. முதல் விருந்தினர் விடுதியிலுள்ள ஏவல் ஆள் வரை ஏதாவதொரு விதத்தில் எப்படியாவது விருந்தினர்களிடம் தங்கள் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் திறனை அந்தக் குடும்பத்தினர் பெற்றிருந்தனர்.

மிட்டாபுரம் டிரைவர்கள் கூட இதற்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தனர். விமான நிலையத்திலிருந்து நகருக்குள் விருந்தாளியை அழைத்து வருகிற போதே சாலையில் திடீரென்று ஒரு விநாடி காரை ஸ்லோ செய்து, வலது பக்கமுள்ள ஓர் ஆறு மாடிக் கட்டிடத்தைச் சுட்டிக் காட்டி, “இது நம்ம முதலாளியோட பில்டிங்தாங்க... ஒரு இங்கிலீஷ் கம்பெனிக்காரன் இப்ப வாடகைக்கு இருக்கான்” என்பான் டிரைவர். அல்லது சம்பந்தமில்லாமல், “இப்ப முதலாளி ஊர்ல இல்லீங்க! மெர்க்காராவிலே புதுசா ஒரு நாலாயிரம் ஏக்கர் காபி எஸ்டேட் வாங்கியிருக்காரு. அங்கே போயிருக்காங்க” என்பான். இப்படி அடிக்கடிபெருமையாகச் சொல்லவும், போதிக்கவும் எல்லா மட்டத்திலும் பழக்கப்பட்டிருந்தனர். எல்லாரும் பயிற்றப்பட்டிருந்தனர்.

“மிட்டாபுரமா? அவங்களை எவனும் அசைச்சுக்க முடியாது! அவங்க கவர்மெண்ட் ஆஃப் இந்தியாவுக்குப் போட்டியா பாரலெல் டுரிஸம் ‘டிபார்மெண்ட்டே’ ரன் பண்றாங்க அப்பா” என்று ஜனங்கள் பேசிக் கொள்ளும் அளவுக்கு ஓர் அந்தஸ்து அவர்களுக்கு வந்திருந்தது. சமூக அந்தஸ்துள்ள விளையாட்டு வீரர், கலைஞர்கள், பிரமுகர்கள் ஆகிய பல துறையினரிடம் தங்களைப் பற்றிய இப்படிப் பேச்சுக்களை நன்கு பயிற்றப்பட்ட தங்கள் ஆட்கள் மூலமே பரப்ப, இந்த விருந்துபசாரங்களை அவர்கள் பொறுத்துக் கொண்டு செய்து வந்தனர். இன்றுவரை ‘மிட்டாபுரம்’ குடும்பத்தாரின் இந்த நிர்வாக யந்திரம் பழுதுபட்டதில்லை. இதில் ஐந்தாம் படைகளும், துரோகிகளும் தோன்றியதில்லை. விசுவாசம் தப்பியதில்லை. இது பக்காவான ஏற்பாடாக இருந்து வந்தது.

ஒரு டிரைவரையோ, சமையற்காரனையோ, விருந்தினர் புகழ்ந்தால், அவர்கள் உடனே ஜென்டிலாக “எல்லாம் முதலாளி ஏற்பாடுங்க! அவங்க பெருமையாலே அத்தனையும் ஒரு குறையுமில்லாமே நடக்குது. நாம் வெறும் கருவிதானுங்களே”என்று மறுத்து விட வேண்டும். இதை அனைவரும் செய்கிறார்களா இல்லையா என்பதைக் கவனிக்க அங்கங்கே முதலாளியின் ஒற்றர்கள் கூட இருந்தார்கள்.

“பணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் செலவழி! கவலையில்லை. அதனால் கிடைக்கிற புகழும், பெருமையும், கித்தாப்பும் மிட்டாபுரம் குடும்பத்துக்குத்தான் போக வேண்டுமே ஒழிய, நடுவே யாரும் தட்டிப் பறிக்கக் கூடாது.” இதுதான் அங்கு நிலவிய தத்துவம்.

இந்தத் தத்துவத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் அனைவரும் வேலை பார்த்தார்கள். முதலாளிக்கு முதுகு சொரியும் இந்த வேலையை நன்றாகவும் இதமாகவும் செய்கிறவர்களுக்கு விசேட கவனிப்பு, சலுகை, சம்பள உயர்வு எல்லாம் தாராளமாகவே கிடைத்தன.