பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : சமர்ப்பணம்

1229

பொதுவாகவே மிட்டாபுரம் குடும்பம் பண விஷயத்தில் கஞ்சத்தனம் பார்ப்பதில்லை. தாராளமாகவே கொடுத்தார்கள். பிடித்தவர்களுக்கு மேலும் தாராளம் காட்டினார்கள்.

“ஏழை யென்றொருவன் - மீதமாக
இங்கிருக்கும் வரையிலே
கோழையாக நாமிருந்தால் - ஒரு
கொடுமையாகு மல்லவோ
தோழனே எழுந்து நில் - இத்
துயர்துடைத்து நம்மவர்
வாழவேணும் போரிடு! இதில்
வர்க்கஞானம் தேறிடு!”

என்றெல்லாம் கவிதை எழுதியிருக்கும் பிரேமதாசனை மிட்டாபுரத்தாருக்குப் பிடிக்காதுதான். ஆனால், இதையெல்லாம் அவர்கள் படித்திருந்தால்தானே? “ஏழை எளியவர்களிடம் பேர் உள்ள கவிஞர். வளைத்துப் போட்டு உபசரிப்போம்” என்று முடிவு செய்தார்கள். உபசரிக்க ஆளனுப்பியும் வைத்தனர்.

கவிஞர்களைப் பற்றி அவர்கள் எதை எப்படிப் பாடியிருந்தாலும் - மது-மாது இரண்டிற்கும் வசப்படுகிறவர்கள் - என்று மிட்டாபுரத்தாருக்கு மொத்தையாக ஓர் அபிப்பிராயம் உண்டு. அனுமானம்தான். ஆனாலும் அது உயர்வாக இல்லை.

மிட்டாபுரம் பி.ஆர். ஓ. டிபார்ட்மெண்டின் சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற ஓமனே என்ற பதினெட்டு வயது இளம் வாளிப்பைக் கோயம்புத்தூருக்கு இரண்டு ஏர்டிக்கெட்டுடன், பிரேமதாசனிடம் அனுப்பி வைத்தார்கள் அவர்கள்.

குமாரி ஓமனே பேரழகி. சிரித்தால் முத்து உதிரும். கிறங்க வைக்கிற சண்பகப்பூ மேனி, சதா எதையோ தேடித் துருவிக் கொண்டிருப்பது போல் பார்க்கும் கருவண்டுக் கண்கள். ஆடவும், ஆளவும் பிரியப்படும் செழிப்பான உடற்கட்டு அவளுடையது.

வாழ்வில் மிகவும் கட்டுப்பாடும், கொள்கையுமுள்ள கவிஞரான பிரேமதாசனே ஒரு கணம் ஓமனேயை எதிரே பார்த்ததும் திணறிப் போனார். பொது மாதிரி இவர்களைப் பிடித்து விட்டது. நீங்கள் யார்? என்ன எழுதியிருக்கிறீர்கள்? ஏன் மக்களால் ஓகோ என்று கொண்டாடப்படுகிறீர்கள் என்பதை எல்லாம் சிந்தித்து, அவரவர்கள் தராதரம் பார்த்து இவர்கள் உங்களையோ, பிறரையோ உபசரிப்பதில்லை. மக்கள் கொண்டாடுகிறவர்களை நாமும் கொண்டாடி விட வேண்டும் என்ற ஒரே குருட்டு நோக்கம்தான். உங்களுக்கும் புகழ் பெற்ற குத்துச் சண்டைவீரர் ஒருவருக்கும் இவர்களிடம் உபசரணையில் வித்தியாசம் இராது. இன்று நீங்கள். நாளை யாரோ ஒரு சாமியார். நாளன்றைக்கு ஒரு சங்கீத வித்வான். அடுத்த நாள் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர். அதற்கு அடுத்த நாள் ஒரு நடிகர். அதற்கும் அடுத்த நாள் ஒரு கம்பெனி டைரக்டர் - என்று இந்த உபசரணைகள் தொடர்ந்து கொண்டே போகும். தங்களை