பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/608

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1230

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

மதிக்கவும், வியக்கவும், புகழவும்,கொண்டாடவும் மிட்டாபுரம் குடும்பம் தன்னிடம் தாராளமாயுள்ள அதிகப் பண வசதியை இப்படி எல்லாம் செலவழிக்கிறது. அவ்வளவுதான்” என்று ஓமனே உள்ளதைச் சொல்லிவிட்டாள்.

இதைக் கேட்டுக் கவிஞர் பிரேமதாசனுக்கு ஆத்திரமே வந்து விட்டது.

“இப்படி டம்பாச்சாரிகளிடம் நான் பலியாக முடியாது ஓமனே!” என்று கத்தினார் அவர். தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது போல் உணர்ந்து கொதித்தார் அவர்.

தன் கவிதைகள் - அவற்றின் சிறப்பு, பெருமை ஆகியவற்றைப் பற்றி ஒரு சிறிதும் அறியாத ஒரு பணக்காரனின் விருந்தாளியாகத் தான் மாட்டிக் கொண்டோம் என்று உணர்ந்த போது மனம் கொதித்தது. ஓமனே அவரைச் சமாதானப்படுத்தினாள்.

“கோபப்படாதீர்கள்! இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்ததால்தானே நான் உங்கள் இரசிகையாக முடிந்தது?”

“உன் முக தாட்சண்யம் தான் என்னைத் தடுக்கிறது, ஓமனே! இன்னும் சில நாட்களில் இந்தக் காவியம் முடிந்து விடும்! பிறகு இந்த மிட்டாபுரம் ஆட்களின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டேன். இப்போது இந்த உபசரிப்பைப் பெற்ற கடனைத் தீர்க்கப் புத்தகம் அச்சானதும் ஒரு பிரதியை மிட்டாபுரம் உரிமையாளருக்கு அனுப்பி வைக்கப் போகிறேன். என் ஆட்டோகிராப்புடன் எனது காவியத்தின் முதல் பிரதியைப் பெற ஐயாயிரம், பத்தாயிரம் தந்து வணங்கி நிற்கக் காத்திருக்கிறார்கள். என் கவிகளின் அருமையை அறியாதவருக்கு முதல் பிரதியை நான் அனுப்புவது என் பெருந்தன்மை என்றுதான் கூற வேண்டும்.”

தொடர்ந்து நாட்கள் ஓடின. கூனூரில் வேலை முடிந்து, பிரேமதாசன் ஊர் திரும்பும் போது ஓமனேயும் திரும்பினாள்.

கவிஞர் பிரேமதாசன் எழுதிய புதுக் காவியத்தில் முதற் பிரதி கவியின் சொந்தக் கையெழுத்தில் ‘இதை எழுதுவதற்கான லெளகீக வசதிகளைச் செய்து கொடுத்த மிட்டாபுரம் குடும்பத்தாருக்கு’ என்று எழுதப்பட்டுக் கையொப்பத்துடன் வந்தது.

ஆனால், உள்ளே வலது கைப்பக்கம் மூன்றாம் பக்கத்தில் சமர்ப்பணம் என்ற தலைப்பின் கீழ் ஓமனே சிரித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பிரசுரித்து, “இந்தப் புன்முறுவலின் சொந்தக்காரிக்கு இக்காவியத்தைப் படைக்கிறேன்” - பிரேமதாசன் என்று கொட்டை எழுத்துகளில் அச்சிட்டிருந்தது. மிட்டாபுரத்தார் செய்த உதவிகள் பற்றி எங்குமே இல்லை.

புத்தகம் வந்து சேர்ந்த பதினைந்தாவது நிமிஷம் ‘பாஸ்’ கூப்பிடுவதாக ஓமனேயிடம் பியூன் வந்து சொன்னான்.

அவள் எதிர்பார்த்த அழைப்புத்தான். போய் நின்றாள். நிறுத்தி வைத்தே விசாரணை நடந்தது. சீஃப் பி.ஆர். ஓவும் கூட இருந்தார். புத்தகம் அவள் முன் பிரித்து எறிவது போல் போடப்பட்டது.