பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : சமர்ப்பணம்

1231

“கம்பெனிக்கு அல்லது இந்த மிட்டாபுரம் ஃபேமிலிக்கு நல்ல பேர் வாங்கித் தர்றதுக்குத்தானே உன்னை மாதிரி ஹோஸ்டெஸ் எல்லாம் மாசச் சம்பளத்துக்கு வச்சிருக்கோம்?”

வீசி எறிந்த புத்தகத்தை எடுத்து ஒன்றிரண்டு பக்கங்களை விரித்த ஓமனேயின் விழிகள் வியப்பால் விரிந்தன.

“அவரா இப்படி எழுதிட்டாரு. நான் சொல்லி அவர் செய்யலே. சொல்லப் போனால் ரெண்டொரு வாட்டி ஜாடைமாடையா ‘மிட்டாபுரம் குடும்பத்தாருக்கு இந்நூல் சமர்ப்பணம்’னு எழுதுங்கன்னு கூட நான் சொல்லிப் பார்த்தேன்.”

“உன் படம் எப்படி அவருக்குக் கிடைச்சுது!”

“கேட்டார்! நானே பிரியப்பட்டுக் குடுத்தேன். கேக்கறப்போ எதுக்குன்னு அவரும் சொல்லலே... நானும் விசாரிக்கல்லே.”

“அதாவது மிட்டாபுரம் ஃபேமிலியை விட அவருக்கு நீ ரொம்ப நெருக்கம்னு உலகத்துக்குக் காமிச்சிக்கணும்னு உனக்கு ஆசை.”

“நிச்சயமா இல்லை.”

“பின்னே எப்பிடி இந்த மாதிரி நடந்தது?”

“ஒரு கவிஞரை இப்பிடி எழுது, அப்பிடி எழுதுன்னு யாரும் வற்புறுத்த முடியாதுன்னு அவரோட பழகினப்ப நான் புரிஞ்சுக்கிட்டேன்.”

“ஆல்ரைட்! நெள யூ கேன் கோ” பத்து நிமிஷத்தில் ஓமனேயின் டெர்மினேஷன் ஆர்டரும், மூன்று மாதச் சம்பளத்துக்கான செக்கும் அவள் மேஜையைத் தேடி வந்தன.

நோயாளித் தந்தையையும், வயதான தாயையும், பள்ளியில் படிக்கும் தங்கை, தம்பிகளையும் காப்பாற்ற இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்து அவளை வழி மறித்தது. பழைய நாளில் இப்படி நடந்திருந்தால், காலைக் கையைப் பிடித்து மன்றாடிக் கெஞ்சியிருப்பாள். கவிஞர் பிரேமதாசனோடு ஒரு மாத காலம் பழகி, அவர் கவிதைகளை இரசித்ததின் விளைவு - அவளுக்குள் அவளது உத்தியோகத்துக்குச் சிறிதும் ஒத்து வராத மானம் ரோஷம் எல்லாம் ஏற்பட்டிருந்தன. கண் கலங்கி நின்றாள். நேரே கவிஞர் பிரேமதாசனைச் சந்திக்கச் சென்றாள்.

“சிரிப்புச் சக்கரவர்த்தினியே! செளந்தரியப்பெட்டகமே வா!”-என்று உற்சாகமாக அவளை வரவேற்றார் கவிஞர்.

“ஏன் இப்படிச் செய்தீர்கள்?”

“எதைப் பற்றிக் கேட்கிறாய் ஓமனே?”

“புத்தகத்தில் என் படத்தைப் போட்டு- ‘இந்தப் புன்முறுவலின் சொந்தக்காரிக்குப் படையல்’ - என்று ஏன் எழுதினீர்கள்?”